Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆம்பூர் அருகே 35 டன் ரேஷன் அரிசி கடத்ததிய 2 லாரிகள் பறிமுதல்: வருவாய்த்துறை அதிரடி

ஆகஸ்டு 09, 2020 06:58

ஆம்பூர்: ஆம்பூர் அருகே வாகன சோதனையின் போது வருவாய் துறையினர்  35 டன் ரேஷன் அரிசியை கடத்திய இரண்டு லாரியை பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குளிதிகை என்ற இடத்தில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன், துணை வட்டாட்சியர் குமார் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேலூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்த முற்பட்டபோது லாரி ஓட்டுனர் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.

இதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் லாரியை சோதனை மேற்கொண்டதில் அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கடத்தப்பட்ட 18 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் வேலூரில் இருந்து ஆம்பூர் வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி லாரி மூலம் கடத்தி செல்வதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் துணை வட்டாட்சியர் குமார் மற்றும் நகர காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆம்பூர் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தப்பித்து சென்ற லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்த போது லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பினார்.

லாரியை சோதனை செய்தபோது அதில் 17 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லாரிகள் மற்றும் 35 டன் ரேஷன் அரிசியை ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பின்னர் கீழ்முருங்கை பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்து தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இரண்டு லாரி ஓட்டுனர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்