Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராமர் கோவில் கட்டுமான பணி துவக்கம்: பா.ஜ. மகிழ்ச்சி; காங்கிரஸ் ஆதங்கம்

ஆகஸ்டு 10, 2020 06:28

புதுடெல்லி: ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, பா.ஜ.,வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'கோவில் கட்டுவோம்' என, ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் சொல்லி வந்த பா.ஜ., ஒரு வழியாக அதை நிறைவேற்றிவிட்டது. உத்தர பிரதேசத்தில், 2022ம் ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

அந்த தேர்தலில், 'பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்போவது, இந்த ராமர் கோவில் தான்' என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது, காங்கிரஸ் தான். பிரச்னையால் பல ஆண்டு களாக பூட்டப்பட்டிருந்த அயோத்தி கோவிலை, 1986ல் திறந்தது, ராஜிவ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு. இப்படி கோவிலுக்காக முதலில் பிள்ளையார் சுழி போட்டது, காங்கிரஸ். ஆனால், 'அதை பெருமையாக சொல்ல முடியவில்லையே; அடக்கி வாசிக்க வேண்டியதாக இருக்கிறதே' என, காங்., தலைவர்கள் நொந்து போயுள்ளனர். அப்படி பெருமையடித்தால், சிறுபான்மையினர் ஓட்டுகள் காங்கிரசுக்கு கிடைக்காது என்கிற பயம் தான் இதற்கு காரணம்.

'இப்போது சிறுபான்மையினரும் கூட, காங்கிரசுக்கு ஒட்டு மொத்தமாக ஓட்டளிப்பதில்லை; எனவே, ராமர் கோவில்விவகாரத்தில் சற்று வெளிப்படையாகவே பேசியிருக்கலாம். இப்படிப்பட்ட விஷயங்களால் தான், பெரும்பான்மையினர் ஓட்டும் எங்களுக்கு கிடைப்பதில்லை. இரண்டும் கெட்டான் நிலையில் தவிக்கிறோம்' என ஆதங்கப்படுகின்றனர், காங்கிரசார்.

இந்தியாவே ராமரை பாராட்டிக் கொண்டிருக்கும் போது, அமைதியாக இருந்தால் சரியில்லை என்பதால் , ராகுல், பிரியங்கா மற்றும் காங்., சீனியர் தலைவர்கள், கோவிலை பற்றி பேசாமல் ராமரை புகழ்ந்தனர். ராமர் கோவில் விவகாரத்தில், வாக்காளர்களை தன் பக்கம், பா.ஜ., இழுத்துக் கொண்டதால், என்ன செய்வது என தெரியாமல், எதிர்க்கட்சிகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன.

தலைப்புச்செய்திகள்