Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது: ஜோதிமணி கணிப்பு

ஆகஸ்டு 13, 2020 08:41

கரூர்: தமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாகவும் எப்போது தேர்தல் வரும் என அவர்கள் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். 

செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜோதிமணி அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு நிகழ்ந்த மொழி ரீதியிலான அவமரியாதை சாதாரணமானது அல்ல. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே தமிழகத்தில் இப்படிப்பட்ட நிலை என்றால், படிப்பறிவில்லாத சாமானியர்களின் நிலையை பற்றி சொல்லவே தேவையில்லை.

தமிழை ஒழிக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனர். அந்த திட்டம் இங்கு எடுபடாது. ரயில்வேயில் கேட் கீப்பர் தொடங்கி உயர் பதவிகள் வரை இந்திக்காரர்கள் தான் பணியமர்த்தப்படுகின்றனர். ரயில் நிலையங்களில் ஒரு டிக்கெட் வாங்குவதற்கு கூட இந்திக்காரர்களிடம் தமிழர்கள் போராட வேண்டியுள்ளது.

மேலும், தமிழகத்தை பொறுத்தவரை தாமரை மலரும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இங்கு ஒரு போதும் தாமரை மலராது. விமான நிலையங்கள் மட்டுமல்லாமல் வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவது தமிழர்களின் குறிப்பாக தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் செயல். 

வரும் சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கான களம். மக்கள் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. மீதும், பா.ஜ.க. மீதும் மக்களுக்கு அளவற்ற கோபம் உள்ளது. இதனால் அந்தக் கட்சிகள் தோற்கடிக்கப்படுவது உறுதி.

இவ்வாறு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்