Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெற்கு ரயில்வே அளித்த பரிந்துரை: சென்னைக்கு ரூ.300 கோடியில் திட்டம்!

ஆகஸ்டு 18, 2020 10:57

சென்னை: ''ரூ.300 கோடியில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது புதிய ரயில்பாதையை அமைக்க வேண்டும்,'' என்று ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மிக முக்கியமான புறநகர ரயில் பாதை வழிதடம் என்றால் அது தாம்பரம்- கடற்கரை வழித்தடம் தான். இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 3 பாதைகள் மட்டுமே உள்ளது.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே தற்போது 2 தண்டவாளப் பாதைகளில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஒரு பாதையில் விரைவு ரயில் அல்லது சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 4வது பாதை இல்லாத காரணத்தால் கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ இயலாத நிலை உள்ளது.

மிகமிக முக்கியமான வழித்தடமான இதில் தான் சென்ட்ரல் (பூங்கா சந்திப்பு), கோட்டை ஆகிய ரயில் நிலையங்களும் வருகின்றன. அத்துடன் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ரயில்கள் செல்ல இதுதான் பிரதான பாதையாகவும் உள்ளது. எனவே, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4வது புதிய பாதை அமைக்க வேண்டுமென தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு செய்து புதிய பாதைக்கு மண் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பாதிப்பு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்துவதில் ரயில்வே வாரியம் தயக்கம் காட்டி வந்த நிலையில் பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதர மாநிலங்களின் ரயில்கள் சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் வழியாக செல்ல போதிய ரயில் பாதை இல்லாததால், கூடுதல் ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படுவதால் 4வது பாதை அமைக்க வேண்டியது அவசியம் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில்பாதை திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து பரிந்துரை செய்தால் , நிறைய ரயில்கள் இயக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர். இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என்று தென்னக ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்