Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவையில் விநாயகர்சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்

ஆகஸ்டு 21, 2020 07:47

புதுச்சேரி: இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு புதுவை மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களிலும், கோவில்களின் முன்பும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே பொதுமக்கள் அவரவர் வீடுகளில் சிறிய அளவிலான சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சிலைகளை செய்யும் கைவினை கலைஞர்கள் விநாயகர் சிலைகளை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீடுகளில் வைத்து வழிபடும் வகையில் 2 அடி அளவுக்கு குறைவான உயரம் உள்ள சிலைகளை செய்து, வண்ணம் தீட்டி வருகின்றனர்.

புதுவை கொசக்கடைத்தெரு, முருங்கப்பாக்கம், வில்லியனூர், கோரிமேடு அடுத்த பட்டானூர் ஆகிய பகுதிகளில் கைவினை கலைஞர்கள் களி மண்ணால் விநாயகர் சிலைகளை செய்து வருகின்றனர். அவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சிலைகளை செய்கின்றனர்.

அதன் பின்னர் சிலைகள் வண்ணம் பூசி நகரின் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட விருப்பமான சிலைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்