Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பவானியில் புனித நீராடிய அமைச்சர்: தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ராஜேந்திரபாலாஜி

ஆகஸ்டு 23, 2020 02:29

ஈரோடு: கொரோனா நோய் பாதிப்பு காரணமாக நாட்டில் பல்வேறு கெடுபிடிகளுடன் கூடிய தளர்வில்லா பொது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் கோவில்கள், மசூதி, தேவாலயங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துடன், ரயில், விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் அரசின் சார்பில், கொரோனா நோய் பாதிப்பு காரணமாக கோவில்களில் பொது மக்கள் கூடாதவாறு அரசு தரிசனத்திற்கு அனுமதி மறுத்து தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் விஜயமாக ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தார். இதையொட்டி ஆலயத்தின் சார்பில் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி பவானி சங்கமேஸ்வரர் சன்னதிக்கு பின்புறம் உள்ள  கூடுதுறை காவிரி ஆற்றுப்படுகையில் ராஜேந்திர பாலாஜி புனித நீராடுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து ஆலயத்தில் உள்ள இந்துசமய அறத்துறையினரால் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் சன்னதியில் அமைச்சர் சிறப்பு தரிசன வழிபாட்டில் ஈடுபட்டார். அரசின் ஊரடங்கு உத்தரவு என்பது நோய் பரவலை தவிர்க்கும் பொருட்டு அனைத்து தரப்பினரும் அரசின் உத்தரவுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பது கட்டாயமான ஒன்றாக இருக்கும் நிலையில் தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒரு மூத்த அமைச்சரே அரசின் உத்தரவுக்கு மதிப்பளிக்காமல் பூட்டி கிடக்கும் பிரசித்தி பெற்ற ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்வதும், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஆச்சாரியர்களும் அத்துமீறி அமைச்சருக்கு சிறப்பு தரிசனத்திற்கு அனுமதியளித்ததும், இவற்றிற்கெல்லாம் காவல்துறையினர் முழுபாதுகாப்பு அளித்ததும் ஈரோடு மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனது சொந்த ஊரில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி புனித நீராடுவதற்காக பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்ததாக தெரிவித்தார். தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை யாரும் தெரிவிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர். அடுத்த தேர்தலுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வர் யார்? என்பது குறித்து முக்கிய கட்சி நிரவாகிகள் கூடி முடிவெடுப்போம் என்றார்.

அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்சி மட்டத்தில் அனைத்து தரப்பினரும் கட்டுப்படுவதாகவும், சசிகலா  சிறையிலிருந்து வெளியே வருவது குறித்த கேள்விக்கு இதுதொடர்பாக  முதல்வரும், துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள் என்றார்.

முன்னதாக தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தவிர்க்கும் பொருட்டு பணக்காரர், பாமரர் வரையிலும் அரசின் தளர்வில்லாத பொது ஊரடங்கு உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ள சூழலில் ஊரடங்கு காலத்தில் தமிழக அமைச்சரவையை சேர்ந்த மூத்த அமைச்சருக்காக பவானி சங்கமேஸ்வரர் கோவில் திறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்