Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டூவீலர் மீது லாரி மோதி விபத்து: மனைவி கண்முன் கணவன் பலி

ஆகஸ்டு 23, 2020 05:04

புதுச்சேரி: புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் மனைவி கண்முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த தெங்கானூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் தனது மனைவி பானுவுடன் நேற்று காலை புதுச்சேரி வில்லியனூரில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கல்மண்டபம் அருகே வந்தபோது தனியார் தொழிற்சாலை உள்ளே செல்ல முயன்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சக்திவேல் தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவிக்கு இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இறந்த சக்திவேலின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்திற்கு காரணமான டிரைவரை கைது செய்ய வலியுறுத்தியும், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் உடலை எடுக்கவிடாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து சக்திவேலின் உறவினர்கள் போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனையடுத்து சக்திவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்