Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனது நிலத்தில் வேலை பார்க்க தொழிலாளர்களை விமானத்தில் வரவழைக்கும் விவசாயி

ஆகஸ்டு 24, 2020 07:47

புதுடெல்லி: டெல்லியில் திஜிப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பப்பன்சிங். அவர் தனது நிலத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் முதல் ஏப்ரல் மாதம்வரை காளான் விளைவிப்பது வழக்கம். அதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 10 பேர் வேலை செய்து வந்தனர். காளான் விவசாயம் முடிந்தவுடன் ஊரடங்கும் வந்து விட்டதால், கடந்த மே மாதம் ரூ.68 ஆயிரம் செலவழித்து, 10 பேரையும் விமானம் மூலம் பீகாருக்கு அனுப்பி வைத்தார். 10 பேரும் முதல்முறையாக விமானத்தில் சென்றனர்.

இந்நிலையில், மீண்டும் காளான் விதைப்பு பருவம் தொடங்கி இருப்பதால், அந்த 10 பேருடன் பீகாரில் இருந்து மேலும் 10 பேரையும் வரவழைக்க பப்பன்சிங் திட்டமிட்டுள்ளார். இதற்காக, வருகிற 27-ந் தேதி பாட்னாவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வருவதற்கு 20 பேருக்கும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். இதற்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவானது. 20 பேரும் பீகாரில் உள்ள அவர்களது கிராமங்களில் இருந்து பாட்னா விமான நிலையத்துக்கு வந்து சேருவதற்கான ஏற்பாடுகளையும் பப்பன்சிங் செய்துள்ளார். இதுகுறித்து பப்பன்சிங் கூறியதாவது:-

இந்த தடவை ஒரு ஏக்கரில் மட்டுமே காளான் விளைவிப்பதால், டெல்லியிலேயே ஆட்களை ஏற்பாடு செய்ய முடியும். ஆனால், அந்த 20 பேரில் பலர் என்னிடம் 15 முதல் 25 ஆண்டுகள்வரை வேலை பார்த்துள்ளனர். அவர்களை என் குடும்ப உறுப்பினர்களாக கருதுவதால், விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து வரவழைக்கிறேன் என்றார்.

தலைப்புச்செய்திகள்