Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்து இறந்த வழக்கு; போலீசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

ஆகஸ்டு 25, 2020 02:28

திருநெல்வேலி: கந்துவட்டி மிரட்டலால் குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கை போலீசார் கைவிடக்கூடாது எனவும் மீண்டும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுார் அருகே காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து 27, மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதிஆருண்யா 4, ஒரு வயது அட்சய பரணிகா ஆகியோர் கடந்த 2017 அக்.,23ல் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இறப்பதற்கு முன்பு இசக்கிமுத்து அளித்த மரண வாக்குமூலத்தில், காசிதர்மத்தை சேர்ந்த முத்துலட்சுமியிடம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வட்டியாக கொடுத்துவிட்டதாகவும் மேலும் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததால், இதுகுறித்து நான்கு முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட முத்துலட்சுமி, அவரது கணவர் தளவாய்ராஜ், அவரது தந்தை காளிராஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் வழக்கு விசாரணையை போலீசார் கைவிட்டனர். இதுகுறித்து இசக்கிமுத்து தம்பி கோபி, திருநெல்வேலி முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‛கந்துவட்டி வாங்கியதற்கான பத்திரங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அலைபேசியில் மிரட்டியதற்கான ஆதாரங்கள், அழைப்பு பட்டியலில் இருந்தும், இதுகுறித்து முன்பே புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காத அச்சன்புதூர் போலீசாரை காப்பாற்றவும், இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் நடவடிக்கை தேவையில்லை என போலீசார் விடுவது சரியல்ல,' என வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட தரப்பில் வக்கீல் சங்கரகிருஷ்ணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பாபு பிறப்பித்த உத்தரவில், ‛இசக்கிமுத்து இறப்பதற்கு முந்தைய வாக்குமூலத்தி்ல், தாம் சொந்த ஊரில் இருந்து பஸ்சில் வந்ததாகவும் அங்கிருந்தே மண்ணெண்ணெய் கொண்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் வழக்கில் அவரது தம்பிதான், மண்ணெண்ணெய் வாங்கி கொடுத்து தீக்குளிக்க தூண்டியதாகவும், தீக்குளிக்க துவங்கும்போது காப்பாற்றிவிடுவதாக கூறியதாகவும் வழக்குபதிவு செய்துள்ளனர்.

கந்துவட்டி கேட்டு மிரட்டியதற்கான பத்திரங்கள், ஆவணங்கள், ஆதாரங்கள் இருந்தும் அவற்றை போலீசார் சேகரிக்கவில்லை. மேலும் முத்துலட்சுமியின் கணவரின் தம்பி கார்த்தி என்பவர்தான் வட்டி வசூலித்துள்ளார். ஆனால் வழக்கில் அவரை சேர்க்கவில்லை. எனவே முத்துலட்சுமி, கணவர் தளவாய்ராஜ், கணவரின் தந்தை காளிராஜ், கணவரின் தம்பி கார்த்தி ஆகியோர் மீது தற்கொலைக்கு உடந்தை 306, தமிழக கந்துவட்டி சட்டம் 2003 ஆகிய பிரிவுகளில் மீண்டும் வழக்குபதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்