Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பண்ருட்டி தொகுதி  அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

ஆகஸ்டு 26, 2020 03:52

 பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் வரிசையாக தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். அவர்களுடைய குடும்பத்தில் சிலரும் பாதிக்கப்பட்டனர்.

பின்னர் சிகிச்சைக்கு பிறகு அனைவரும் குணம் அடைந்தனர். இதேபோல் எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு(உளுந்தூர்பேட்டை) செஞ்சி மஸ்தான்(செஞ்சி) வசந்தம் கார்த்திகேயன்(ரிஷிவந்தியம்) கணேசன்(திட்டக்குடி) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அ.தி.மு.க. மகளிரணி துணை அமைப்பாளராகவும் இருப்பவர் சத்யா பன்னீர்செல்வம் (வயது 42). இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். மேலும் கட்சி சார்பில் நடந்த ஆய்வு பணியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டதால் உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே வெளியான பரிசோதனை முடிவில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வுக்கும் அவரது குடும்பத்தினர் 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வும் அவரது குடும்பத்தினர் 3 பேரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2-வது எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் ஆவார். ஏற்கனவே தி.மு.க. எம்.எல்.ஏ. கணேசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்