Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் அதிகரிக்கும் கரோனா தொற்று எதிரொலி: உருவாகும் புதிய சிகிச்சை மையங்கள்

ஆகஸ்டு 27, 2020 03:57

கோவை: கோவையில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், தொற்றுக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு விடுதியிலும், அண்ணா பல்கலைக்கழக மண்டல மாணவர் விடுதியிலும் ‘கோவிட் கேர் -19’ மையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த மையங்களைக் கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இன்று ஆய்வு செய்தார்.

கரோனா பரவுதலைத் தடுப்பதற்காகப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைக் கோவை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. தொற்றுக்கு உள்ளானவர்களுக்குக் கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கொடீசியா ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவை தவிரக் கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கரோனா மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கிடையே சமீபகாலமாகக் கோவை மாநகரில் கரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. தினமும் சராசரியாக 300-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு விடுதியில் சுமார் 450 படுக்கைகளுடனும், அண்ணா பல்கலைக்கழக மண்டல மாணவர் விடுதியில் சுமார் 200 படுக்கைகளுடனும் ‘கோவிட்-19 கேர் மையங்கள்’ அமைக்கப்படவுள்ளன.

இந்த மையங்களைக் கோவை மாநகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான ஷ்ரவன்குமார் ஜடாவத் இன்று ஆய்வு செய்தார். இம்மையங்களில் சுகாதார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின் வசதி ஆகியவற்றைப் பார்வையிட்ட அவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குப் போதுமான மருத்துவ வசதிகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

முன்னதாகக் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட அரசினர் பொறியியல் கல்லூரியில் உள்ள முன்னாள் மாணவர் சங்க ராஜலட்சுமி ஆடிட்டோரியத்தில் கரோனா தடுப்பு மையத்தைத் தேர்வு செய்வதற்கான இடத்தையும் அவர் பார்வையிட்டார்.

தலைப்புச்செய்திகள்