Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.14,518 கோடி கடனை திருப்பியளிக்க முன்வந்த விஜய் மல்லையா நிறுவனம்

ஆகஸ்டு 29, 2020 08:42

பெங்களூரு: கடன் மோசடி செய்துவிட்டு, லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் யுனைடெட் ப்ரீவரீஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (யுபிஎச்எல்) நிறுவனம், ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடன் நிலுவையை செலுத்த முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனர் விஜய் மல்லையா வங்கியில் வாங்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தாமல் தப்பியோடி லண்டனில் வசித்து வருகிறார். இவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பாக தரவேண்டிய கடன்களுக்காக, அந்நிறுவனத்தின் விளம்பரதாரராக இருக்கும் யுனைடெட் ப்ரீவரீஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (யுபிஎச்எல்) நிறுவனத்தை பொறுப்பாக்க வேண்டுமென கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றம் சென்றது யுபிஎச்எல்.

இந்நிலையில், யுபிஎச்எல்) நிறுவனம், ரூ.14,518 கோடி மதிப்புள்ள கடன் நிலுவையை செலுத்த முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 14 வங்கிகளின் கூட்டமைப்பிற்கு இத்தொகை செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. திவால் சட்டங்களின் நோக்கம், நிறுவனங்கள் செயல்படும் தன்மையுள்ளதாகவும், தங்களுடைய கடன்களை திரும்ப செலுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று யுபிஎச்எல் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் சார்பில் தற்போது விடுக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு கடன் திரும்ப செலுத்துதல் உத்தரவாதம், கடந்த மார்ச் மாதம் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்