Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

ஆகஸ்டு 31, 2020 12:47

புதுடில்லி: டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று மாலை  காலமானார். 

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 10-ம் தேதி டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் (அவருக்கு வயது 84). பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், இன்று மாலை அவர் காலமானார். 

இது தொடர்பாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவு: டாக்டர்களின் கடுமையான முயற்சி, இந்திய மக்களின் பிரார்த்தனைக்கு பிறகும், எனது தந்தை பிரணாப் முகர்ஜி காலமாகிவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

அவருக்கு அபிஜித், இந்திரஜித் என்ற இரண்டு மகன்களும், சர்மிஸ்தா என்ற மகளும் உள்ளனர். மனைவி, சுவ்ரா முகர்ஜி கடந்த 2015 ல் காலமாகிவிட்டார் பிரணாப் முகர்ஜி, பாரத ரத்னா, பத்ம விபூஷண் விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2012 முதல் 2017 வரை ஜனாதிபதி பதவி வகித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய பிரணாப் முகர்ஜி, கடந்த 1982- 84, 2009-12, ஆண்டுகளில் நிதி அமைச்சராகவும், 2004- 06 வரை பாதுகாப்பு அமைச்சராகவும், 1995-96,2006-09 ஆண்டுகளில் வெளியுறவு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 1980 முதல் 1985 ராஜ்யசபா தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்