Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் அதிகரிக்கும் கரோனா: நகைக்கடைகள் மற்றும் பட்டறைகள் இன்று முதல் 7 நாட்களுக்கு மூடல்

செப்டம்பர் 01, 2020 07:54

கோவை: கோவையில் அதிகரிக்கும் கரோனா தொற்றால் இன்று முதல் 7 நாட்களுக்கு (7-ம் தேதி வரை) நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகள் மூடப்படுகின்றன. கோவையில் ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, பெரியகடைவீதி உள்ளிட்ட இடங்களில் பெரியதும், சிறியதுமாக ஏறத்தாழ 350 நகை விற்பனைக் கடைகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

அதேபோல், கடைவீதி, வைசியாள் வீதி, செல்வபுரம், தெலுங்கு வீதி, சலீவன் வீதி, கெம்பட்டி காலனி, பெரியகடைவீதி, ராஜவீதி, மில் ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் ஏறத்தாழ 25 ஆயிரம் நகைப்பட்டறைகள், நகை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.

வாடிக்கையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் அளிக்கும் தங்கக்கட்டிகளை பெற்று, அவர்கள் கேட்கும் வகையில், பல வடிவங்களில் ஆபரணங்களாக செய்து தருவது இவர்களது பணி ஆகும். கோவை மாவட்ட நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் உள்ள மேற்கண்ட 350 நகைக்கடைகளில் தினசரி சராசரியாக ரூ.50 கோடிக்கு வியாபாரம் நடைபெற்று வந்தது. குறிப்பாக, முகூர்த்த நாட்களில் வியாபாரத்தின் தொகை மேலும் அதிகரிக்கும்.

மாவட்டம் முழுவதும் நகைக்கடைகள் இருந்தாலும், மேற்கண்ட மாநகரில் உள்ள பகுதிகளில் தான் நகைக்கடைகள் அதிகம். அதேபோல், கோவை மாவட்ட நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கீழ் வரும் நகைப்பட்டறைகள் மற்றும் நகை தயாரிப்பு நிறுவனங்களில் கடந்த மார்ச் இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குக்கு முன்னர் தினமும் சராசரியாக 200 கிலோ அளவுக்கு நகை தயாரிக்கப்பட்டது.

ஆனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பட்டறைகள் திறக்கப்பட்ட பின்னர், இதன் உற்பத்தி அளவு குறைந்தது. அதாவது, கடந்த சில வாரங்களாக மேற்கண்ட பட்டறைகளில் முன்பு இருந்ததை ஒப்பிடும் போது, தினமும் 30 சதவீதம் அளவுக்கு மட்டுமே நகைகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

மேற்கண்ட நகைக்கடைகளுக்கு அதிகளவிலான மக்களும், நகைப்பட்டறைகளுக்கு அதிகளவிலான வியாபாரிகளும் வந்து செல்வதை தவிர்க்க முடியாத சூழல் உள்ளது. இருப்பினும், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், அரசு அறிவித்தபடி, முக்கவசம் கட்டாயம் அணிதல், தனிநபர் இடைவெளி கடைபிடித்தல், கிருமிநாசினி மூலம் கைகளை கழுவுதல், குளிர்சாதன வசதியை பயன்படுத்தாது இருத்தல் போன்ற அனைத்து வித நோய் தடுப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வந்தன. இதை மாநகராட்சி பறக்கும்படைக் குழுவினர் அடிக்கடி சோதனை செய்து கண்காணித்து வந்தனர்.

நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளில் கரோனா நோய் தடுப்பு முறைகள் அமல்படுத்தப்பட்டாலும், அதை முறையாக பின்பற்றுவது சவாலானதாக உள்ளது. தனிநபர் இடைவெளி மீறல், கூட்டத்தை தவிர்க்க முடியவில்லை. மேலும், மாவட்டத்தில் தொற்று பரவலின் வேகமும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நகைக்கடைகள் மற்றும் பட்டறைகளை இன்று முதல் 7-ம் தேதி வரை மூட மேற்கண்ட சங்கத்தினர் முடிவு செய்து, இன்று முதல் பின்பற்றி வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சபரிநாத் கூறும்போது, "அரசு அறிவித்த கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் நகைக்கடைகளில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும் நகைக்கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் குடும்பத்தோடு வருகின்றனர். அவர்களை தனிநபர் இடைவெளி பின்பற்றி அமர்ந்து நகைகளை பார்க்குமாறு கூறினால், நம்மிடம் சங்கப்பட்டுக் கொள்கின்றனர். இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்க்க முடியாதது ஆகிறது.

எனவே, கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும் வகையில், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், நகைக்கடைகளை இன்று முதல் 7-ம் தேதி வரை மூட முடிவு செய்யப்பட்டு, பின்பற்றி வருகிறோம். மேலும், 7 நாட்களுக்கு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் கடைகள் மூடுவதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.350 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்படும்" என்றார்.

தலைப்புச்செய்திகள்