Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி ஆட்சியில் ஜி.டி.பி. சரிஞ்சு போச்சு, வேலைவாய்ப்பு குறைந்து விட்டது: ராகுல் காந்தி

செப்டம்பர் 02, 2020 07:15

புதுடெல்லி: "பிரதமர் மோடியின் ஆட்சியால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்," என்ற பெயரில் தனது ட்விட்டரில் ஒரு லிஸ்ட் போட்டு பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கதிகலங்க வைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு பிறகு ராகுல் காந்தியின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாகவே உள்ளது. ப.சிதம்பரம் எப்படி நறுக்கென பா.ஜ.க.வை கேள்வி கேட்கிறாரோ, அதுபோலவே ஒவ்வொன்றிற்கும் ராகுல்காந்தி கேட்டு வருகிறார். ட்வீட்டுகளை உடனுக்குடன் பதிவிடுகிறார். இது காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் 'வாட்ஸ் அப்' ,  'பேஸ்புக்' போன்ற சோஷியல் மீடியாக்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. இதற்கு ராகுல்காந்தி, "இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கம் மீதான 'பேஸ்புக்' மற்றும் 'வாட்ஸ் அப்'பின் வெட்ககேடான தாக்குதலை சர்வதேச ஊடகங்கள் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளன.

ஒரு வெளிநாட்டு நிறுவனம் மட்டுமல்ல, நம் நாட்டின் விவகாரங்களில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது. குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படவும் வேண்டும்" என்றார்.

அதேபோல, நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜி.டி.பி. எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமானது, இதுவரை இல்லாத அளவுக்கு மைனஸ் 23.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இதற்கும் ராகுல் ட்வீட் பதிவிட்டிருந்தார்..

"நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 23.9 சதவீதம். தேசத்தின் பொருளாதாரத்தை அழிப்பது ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தில் இருந்து துவங்கியது. அப்போதிலிருந்து மத்திய அரசு தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக தவறான கொள்கைகளையே அறிமுகப்படுத்தியது" என்று தெரிவித்திருந்தார்.

இப்போது "பிரதமர் மோடியின் ஆட்சியால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்" என்ற கேப்ஷனுடன் மற்றொரு ட்வீட் போட்டுள்ளார் ராகுல்காந்தி. அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:

*   வரலாறு காணாத அளவு ஜி.டி.பி. சரிவு (23.9 சதவீதம்)

*  45 ஆண்டுகளில் இல்லாத வேலை வாய்ப்பின்மை.

*   12 கோடி பேர் வேலையை இழந்த சோகம்.

*  மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை மத்திய அரசு தரவில்லை.

*   சர்வதேச அளவில் அதிகப்படியான கோவிட்-19 தினசரி பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் இந்தியாவில் காணப்படுகிறது.

*   நமது நாட்டின் எல்லை பகுதிகளில் அண்டை நாடுகளில் அத்துமீறல்.

இவ்வாறு ராகுல்காந்தி பா.ஜ.க. மீது சரமாரியாக குற்றம்சுமத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்