Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சனிக்கிழமை விடுமுறை  வேண்டும்: அரசு ஊழியர்கள் முக்கிய கோரிக்கை 

செப்டம்பர் 02, 2020 07:21

சென்னை: சனிக்கிழமையை மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அரசு அலுவலகங்கள் முற்றிலும் இயங்கவில்லை. கிட்டத்தட்ட ஒருமாதம் கழித்தே குறைந்த அளவு ஊழியர்களுடன் அரசு அலுவலங்கள் இயங்கின. அதன்பிறகு படிப்படியாக 50 சதவீத ஊழியர்களை வேலைக்கு சுழற்சி முறையில் வர அரசு உத்தரவிட்டது. இப்போது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதித்த அரசு 100 சதவீதம் அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக சனிக்கிழமையை மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது:
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பதற்காக வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல்வேறு தளர்வுகளையும் முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி தற்போது, அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் பணியாற்றி வரும் சூழலில், செப்டம்பர் 1ம் தேதி முதல் 100 சதவீத அலுவலர்கள் பணியாற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு உத்தரவுப்படி 50 சதவீத அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்த சூழ்நிலையில், அனைத்து சனிக்கிழமையும் வேலைநாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அன்றைய சூழ்நிலையில் அந்நிகழ்வு தேவைப்பட்டது.

தற்போது, 100 சதவீத அலுவலர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட உத்தரவு பிறப்பித்த வேளையில் சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை. எனவே, 100 சதவீத பணியாளர்களும் அலுவலகங்களில் பணியாற்றி வரும் இந்த நேரத்தில் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்து முதல்வர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு சண்முகராஜன் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்