Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குல தெய்வம் கோவில் புனரமைப்பு பணியில் துர்கா ஸ்டாலின்

செப்டம்பர் 02, 2020 08:02

நாகப்பட்டிணம்: 2021 சட்டசபை தேர்தலில், திமுக வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்க வேண்டி தன் குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்து கட்டி வருகிறார் அவரது மனைவி துர்கா.

வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேற கோரி முக்கிய கோயில்களில் வழிபாடு நடத்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா திட்டமிட்டுள்ளார். அதற்காக நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் தன் குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை துர்கா புதுப்பித்து கட்டி வருகிறார்.

இந்த கோயிலின் பரிவார மூர்த்திகளை புனரமைத்து பிரகார மண்டபங்கள் கட்டும் பணிகளை சமீபத்தில் தன் குடும்பத்தினருடன் சென்று துர்கா பார்வையிட்டார். கோயில் புனரமைக்கப்பட்டு வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சமீபத்தில் கோயில் புனரமைக்கும் பணிகளை துர்கா முகக்கவசம் அணிந்தபடி பார்வையிட்ட வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

இந்த வீடியோவில் துர்காவிடம் கட்சி பிரமுகர் ஒருவர் ‘கோயில் பணிகளை நீங்கள் வந்து பார்வையிட்டது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் சிறியதாக ஆரம்பித்த கோயில் பணி ஆலமரமாக வளர்ந்து வருகிறது. கட்டுமான வேலை துவங்கி அஸ்திவாரம் துாண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன’ என்றார்.

குடும்ப ஜோதிடரின் ஆலோசனைப்படியே குல தெய்வம் கோயிலை புனரமைக்கும் பணிகளை துர்கா துவக்கி உள்ளார். அதன் தொடர்ச்சியாக பழநி, திருச்செந்துார் முருகன் கோயில்களில் பவுர்ணமி நாளில் வழிபாடு நடத்தவும் துர்கா திட்டமிட்டுள்ளார். ராகு கேது பெயர்ச்சி ஒட்டி ஆன்மிக பயணங்களை அவர் மேற்கொள்ள இருக்கிறார் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

தலைப்புச்செய்திகள்