Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராமநாதபுரத்தில் இளைஞர் கொலை: அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் சாலை மறியல்

செப்டம்பர் 02, 2020 08:04

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இளைஞர் கொலை வழக்கில் 12 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் வசந்தநகர் சாலையில் நின்று கொண்டிருந்த, தாயுமான சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் அருண் பிரகாஷ் (24), வசந்த நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் யோகேஸ்வரன்(20) ஆகியோரை நேற்று முன்தினம் மாலை 12 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியது. இதில் அருண் பிரகாஷ் உயிரிழந்தார், பலத்த காயமடைந்த யோகேஸ்வரன் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் பிற்பகல் நண்பர்களான அருண் பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து, முன்விரோதம் காரணமாக வைகைநகரைச் சேர்ந்த சரவணன், சின்னக்கடையைச் சேர்ந்த சபீக் ரகுமான் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சரவணன், சபீக் ரகுமான் ஆகியோர் தங்களுடன் 10 பேரை அழைத்துக் கொண்டு வந்து மாலையில் அருண் பிரகாஷையும், யோகேஸ்வரனையும் கத்தியால் குத்தி தாக்கியுள்ளது தெரிய வந்தது.

அதனையடுத்து சின்னக்கடையைச் சேர்ந்த லெப்ட் சேக் என்ற சேக் அப்துல் ரகுமான், இம்ரான்கான், வைகை நகர் சரவணன், சின்னக்கடையைச் சேர்ந்த வெற்றி, சதாம், ஹக்கீம், வாப்பா என்ற ராசிக், அசார், அஜீஸ், அஜ்மல், சபீக் ரகுமான், ஹைதர் அலி மரைக்காயர் ஆகிய 12 பேர் மீது 8 பிரிவுகளில் கேணிக்கரை ஆய்வாளர் பிரபு வழக்குப்பதிவு செய்தார். இதுதொடர்பாக முகமது ரியாஸ், காமாட்சி, சுரேஷ், சாகுல் ஹமீது ஆகிய 4 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே அருண் பிரகாஷ் உடல் வைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று காலை அவரது உறவினர்கள் திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இப்போராட்டத்தில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் குப்புராமு, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, மருது சேனை நிறுவனத் தலைவர் ஆதி நாராயணன், அகில இந்திய அகமுடையார் சங்க நிறுவனர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அவர்களுடன் டிஎஸ்பி வெள்ளைத்துரை பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.

தலைப்புச்செய்திகள்