Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்தார் நடிகர் எஸ்.வி.சேகர்

செப்டம்பர் 03, 2020 02:37

சென்னை: தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுத் தாக்கல் செய்துள்ளார். 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி ஆடை போர்த்தப்பட்டது மற்றும் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமதிக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கண்டனம் தெரிவித்தார்.

முதல்வரின் கண்டனத்துக்கு பதிலளித்த பாஜக பிரமுகர் நடிகர் எஸ்.வி.சேகர், “காவியைக் களங்கம் என்று குறிப்பிடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்ட் 15ம் தேதி அந்த களங்கமான தேசியக் கொடியைத்தான் ஏற்றப்போகிறாரா? இல்லை தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை, பச்சை நிறத்தை மட்டும் கொண்ட தேசியக்கொடியை ஏற்றப்போகிறாரா?” என்று முதல்வருக்கு கேள்வி எழுப்பி சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்மேல் அளித்த புகாரின் பேரில், சென்னை குற்றப் பிரிவு போலீஸார், நடிகர் எஸ்.வி.சேகர் தேசியக் கொடியை அவமதித்ததாக தேசிய கவுரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், நடிகர் எஸ்.வி.சேகர் இந்த வழக்கில் தான் போலீசாரால் கைது செய்யக் கூடும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

கடந்த வாரம் இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜரானார். அப்போது, அவர் எஸ்.வி.சேகர் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கலாம். அதே நேரத்தில் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறினார்.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் எஸ்.வி.சேகர் தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்து உத்தரவாத மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் எஸ்.வி.சேகர் தான் செய்த சேவைகளை விளக்கி பட்டியலிட்டுள்ளார். மேலும், தனது தாய் தந்தையைவிட தேசியக் கொடியை தான் நேசிப்பதாக தெரிவித்துள்ளார். தான் பள்ளி விழாக்களில் கலந்துகொள்ளும்போது தேசியக் கொடியின் பெருமைகள் குறித்து பெருமையாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளதையும் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் எஸ்.வி.சேகர் அந்த மனுவில் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும் தமிழக முதல்வர் பழனிசாமி குறித்துப் பேசியதற்கும் வருத்தம் தெரிவிப்பதாகவும் தனது வாழ்நாள் முழுவதும் இனி தேசியக்கொடியை ஒருபோதும் அவமதிக்கும் வகையில் பேசமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

எஸ்.வி.சேகரின் உத்தரவாத மனுவை ஏற்றுக்கொண்டு பதிவு செய்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, எஸ்.வி.சேகரை செப்டம்பர் 7ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்