Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணல் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செப்டம்பர் 03, 2020 05:29

சென்னை: ''மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கினால் இனி முன்ஜாமீன் கிடையாது ,''  என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்கள் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 40 மனுக்கள், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகமது ரியாஸ் முன்ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அப்போது, நாட்டையே லாக்டவுன் முடக்கி போட்டிருந்தாலும் மணல் கடத்தல்காரர்களை மட்டும் இந்த லாக்டவுன் பாதிக்கவில்லை என தெரிவித்த நீதிபதி, இத்தகையவர்களால் நிலத்தடி நீர் ஆதாரங்களும், சுற்றுச்சூழலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதாக வருத்தம் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நீதிமன்றத்திற்கு வந்த மணல் கடத்தல் தொடர்பான முன்ஜாமின் வழக்குகளில் கடுமையான நிபந்தனைகள் மற்றும் அபராதம் விதித்து முன்ஜாமீன் வழங்கிய போதும், நீதிமன்றத்திற்கு வரும் முன்ஜாமீன் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை என்றார்.

அத்துடன் தினந்தோறும் குறைந்தது மணல் கடத்தல் தொடர்பான 15 முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றங்கள் கடுமையான பல உத்தரவுகளை பிறப்பித்தும் அதை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருவதாக தெரிவித்த நீதிபதி, எப்படியாயினும் முன்ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அத்தகையவர்கள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், முன்ஜாமீன் வழங்கப்படும்போது விதிக்கப்படும் அபராதங்களை தொழில் செலவாகவே அவர்கள் கருதத் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.

கனிமங்கள், மணல்,காடுகள் என சுற்றுச்சூழலை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அதனை கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என தெரிவித்த நீதிபதி, உயர் நீதிமன்றம் இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தாலும், அதனை அரசு மற்றும் அதிகாரிகள் உரிய முறையில் அமல்படுத்தாத சூழல் உள்ளதாகவும் கடத்தல்காரர்களுக்கு முன் ஜாமீன் கிடைக்கும் வரை காவல் துறையினரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் அவர்களை கண்டு கொள்வதில்லை எனவும் வருத்தம் தெரிவித்தனர்.

சுற்றுச்சூழலை பேணிக்காக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இனி மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் முன் ஜாமீன் கோருபவர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்காது என்று திட்டவட்டமாக தெரிவித்து 40 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா.

தலைப்புச்செய்திகள்