Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் பா.ஜ. வெற்றிபெற்றே ஆக வேண்டும்: காய் நகர்த்தும் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா

செப்டம்பர் 03, 2020 05:31

சென்னை: நாங்கள் தனியாக நின்றாலே 60 இடங்களில் அசால்ட்டாக வெற்றிபெறுவோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். இவருக்கு  பின்னால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அரசில் சாணக்கியத்தனம் உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எத்தனையோ மூத்த தலைவர்கள் தமிழகத்தில் இருந்தும், இத்தனை நாள் பா.ஜ.க. என்ற கட்சி எங்கிருந்தது?, எத்தனை இடங்களில் வெற்றி பெற்று வாக்கு சதவீதத்தை பிடித்தது? என்பது கண்டுபிடிக்கவே முடியாத ஒன்றாகத்தான் கடந்த கால அரசியல் இருந்தது. இதை நோட்டாவும் வெளிப்படுத்தியவாறே இருந்தது.

தமிழிசை என்ற ஒற்றை பெண்ணின் வீரியத்தால், பா.ஜ.க. துளிர்த்தது உண்மைதான். மலராத தாமரையை மலர்ந்துவிட்டது போன்ற ஒரு மாயையை தமிழிசை சவுந்தராஜன் ஏற்படுத்தியதற்கான உழைப்பும், அர்ப்பணிப்பும் கொஞ்ச நஞ்சமல்ல.

அதோடு சரி. அதற்கு பிறகு பா.ஜ.க. என்றாலே அதிருப்திகளுக்குள் நிறைந்து போயிற்று. தமிழக மக்கள் எதிர்ப்பை அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டது. மத்திய அரசின் கொள்கைகள், அறிவிப்புகள் இப்படி எதுவுமே நலன் பயப்பதாக இல்லை. இதை இங்கிருக்கும் மாநில பா.ஜ.க. தலைமையும் தட்டி கேட்டு கேள்வி எழுப்ப வில்லை. இந்த நெருக்கடி சமயத்திலும், குறைந்த பட்சம் பி.எம். கேர் நிவாரண நிதியில் இருந்து 10 பைசாவைகூட வாங்கி தரவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகர் மனத்தில் உள்ளது.

இதனால் மாறாக, மாற்று கட்சியில் இருக்கும் அதிருப்தி மூத்த தலைகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் முயற்சியில் இறங்கியது. இன்னொரு பக்கம் சமீபத்தில் வந்த காயத்ரி ரகுராம், அண்ணாமலை போன்றோருக்கு சீட் தந்து உயர்த்தி பிடித்தது. இதற்கு நடுவில் நடிகர் ரஜினியை இன்னமும் வழிக்கு கொண்டு வர முடியாமல் திணறியும் வருகிறது.

இப்படிப்பட்ட சமயத்தில்தான், எல்.முருகன் ஒரு பேட்டி தந்திருந்தார். நாங்க சும்மாவே 60 சீட்களில் ஜெயிப்போம் என்றார். இதன் அர்த்தம், அ.தி.மு.க.விடம் தங்களுக்கு 60 சீட்களை ஒதுக்க வேண்டும் என்று மறைமுகமாக தெரிவிக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது. இவ்வளவு சீட் வேண்டும் என்று பேரம் பேசுவதுபோலவே இந்த பேட்டி எடுத்து கொள்ளப்பட்டது. அதுமட்டுமில்லை, வழக்கு போடவேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ளோர் மீது தான் போட வேண்டும் என்று பொடி வைத்தும் பேசியிருந்தார்.

முருகன் இப்படி பேசுகிறார் என்றால், பா.ஜ.க. மேலிடத்தின் காய் நகர்த்தல் இல்லாமல் இருக்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதில் முதல் விஷயமாக, தன்னுடைய வழக்கமான பாணியை மாற்றி அப்படியே திராவிட கட்சிகளை போல தேர்தலில் களமிறங்க போகிறதாக தெரிகிறது. அதாவது, தி.மு.க. அ.தி.மு.க. தேர்தல் சமயங்களில் என்னென்ன வியூகங்களை கையில் எடுக்குமோ அது முதல், தேர்தல் பணி வரை எல்லாமே திராவிட கட்சிகளின் பாணியை பின்பற்ற போவதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக, இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களில் எங்கு, எப்படி சறுக்கினோம்?, யார் காரணம்? என்பதையும் கண்டறிந்து அதை தகர்க்கும் முயற்சியல் இறங்கியுள்ளது. உதாரணத்துக்கு, பூத் கமிட்டி அமைப்பதில், கடந்த காலங்களில் ஏமாற்றியதுபோல் இந்த முறை ஏமாற்ற முடியாத அளவுக்கு, டெக்னிக்கல் விஷயங்களை கையில் எடுத்துள்ளது. இதை தவிர, முக்கிய நகரங்களில் 5 ஆயிரம் பைக்குகளில் ஊர்வலம், பேரணி, பொதுக்கூட்டம் போன்றவை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இதையெல்லாம் சரியாக களைந்துவிட்டால், குறைந்தது 30 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த பிரதமர் மோடி,  உள்துறை அமித்ஷா மற்றும்  நட்டா ஆகியோர் முடிவு செய்துள்ளார்கள். இந்த சீட்டுகளை அ.தி.மு.க.விடம் வாங்கி தருவது தங்கள் பொறுப்பு என்றும், அப்படி தரப்படும் 20 தொகுதிகளில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு இந்த முறை தமிழக பா.ஜ.க. செல்ல வேண்டும் என்றும் சொல்லி உள்ளார்கள். இதற்காக கட்சிக்குள் என்னென்ன மாறுதல்கள் செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்வதற்கு எல்.முருகனுக்கு அனுமதியுடன் சுதந்திரமும் தந்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.

இதற்கு காரணம், முருகனின் செயல்பாடுகள் பா.ஜ.க. தலைமையை திருப்திப்படுத்தும் வகையிலேயே இருந்து வருகிறது. மாற்று கட்சியில் உள்ளவர்களை தன் கட்சியில் சேர்ந்த பிறகு அவர்களுக்கு உரிய பொறுப்பு தருவது வரை எல்லாமே சிறப்பாக எல்.முருகன் செய்து வருவது அவர்களை கவர்ந்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தி.மு.க.வை ஏற்கனவே முரசொலி விவகாரத்தில் கேள்வி எழுப்பியது முருகன் தான் என்பதால், வருங்காலத்திலும் தி.மு.க.வை எதிர்கொள்ள முருகனால் முடியும் என்று தலைமை நம்புகிறது. இது கந்த சஷ்டி விவகாரத்திலும் பளிச்சென தெரிந்தது. அதுமட்டுமல்ல, தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள மேலும் சில தலைவர்களை இழுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் சிலரிடம் நேரடியாக பேச்சுவார்த்தையும் நடத்தி வருவதாக சொல்கிறார்கள். இதனால் தி.மு.க. தரப்பு மேலும் டென்ஷனாகி உள்ளதாக தெரிகிறது.

இப்படிப்பட்ட காரணங்களுக்காகவே பா.ஜ.க. தலைமை எல்.முருகன் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்துள்ளது. பட்டியலின சமுதாய வாக்குகளை குறி வைத்து முருகனை களமிறக்கினாலும், தற்போது, தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. தலைமை, பக்காவாக பிளான்களை அமைத்து வருவது தமிழக அரசியல் களத்தையே அசைத்து பார்க்க வைத்து வருகிறது.

தலைப்புச்செய்திகள்