Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவு: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காலி

செப்டம்பர் 04, 2020 07:41

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது கன்னியாகுமரி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றவர் வசந்தகுமார். கடந்த மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளான அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனாவில் இருந்து மீண்டாலும் உடல் நலமடையவில்லை கடந்த மாதம் 28ம் தேதியன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காலியானது. இந்த விபரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இதனை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி வசந்தகுமார் மறைந்த நாளில் இருந்து கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளதாக கருதப்படும். விதிமுறைகளின் படி காலியாக உள்ள தொகுதிக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.

கன்னியாகுமரி தொகுதிக்கு வரும் பிப்ரவரிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, சட்டசபை தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்