Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பில் புதுவை அரசு தோல்வி: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் குற்றச்சாட்டு

செப்டம்பர் 05, 2020 07:36

புதுச்சேரி: ''கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் புதுவை அரசு தோல்வி கண்டுள்ளது,'' என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் குற்றஞ்சாட்டினார்.

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா தடுப்பு விஷயத்தில் புதுவை காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு முழுமையாக தோல்வியை கண்டுள்ளது. இந்த தோல்விக்கு கவர்னர் மற்றும் ஆளும் அரசுக்கு இடையேயான மோதல் போக்கும் ஒரு காரணமாக அமைந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பே மருத்துவம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், உபகரணங்கள் வாங்கவும், போதுமான டாக்டர்கள், நர்சுகள் நியமனம் செய்யவும் அரசால் அனுப்பப்பட்ட கோப்புகளுக்கு இப்போதுதான் அனுமதி கிடைத்து ஒரு சில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பே கவர்னர் அனுமதி வழங்கியிருந்தால் கொரோனா தொற்றை புதுச்சேரியில் ஓராளவு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம்.

தற்போது தினசரி செய்யப்படும் 1,800 பரிசோதனைகளை 3 ஆயிரமாக உயர்த்த முதல்வர் அறிவித்து இருந்தார். ஆனால் அவரது அறிவிப்புக்கு பின்னர் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு இப்போது 1,300 நபர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யும் நிலையை சுகாதாரத்துறை இயக்குனர் வாய்மொழி உத்தரவு மூலம் செய்துள்ளார்.

முதல்வரின் உத்தரவையே மீறும் அதிகாரத்தை சுகாதாரத்துறை இயக்குனருக்கு யார் அளித்தது? இதில் உள்ள உண்மை நிலையை கவர்னரும், முதல்வரும் உணர்ந்து சுகாதாரத்துறை இயக்குனரை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்