Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இல்லாத நோயை இருக்கு என்பதா? பேனரால் பரபரப்பு

செப்டம்பர் 07, 2020 08:07

கோவை: கொரோனா தொற்று இல்லாத, 4 பேருக்கு, 'பாசிட்டிவ்' என கூறி, வீட்டை தனிமைப்படுத்தி, தன்னையும், குடும்பத்தினரையும், அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி, கோவையில் வைக்கப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஹோப் காலேஜ் பகுதியில் வசிக்கும் ஒருவர், 'கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள்' என்ற தலைப்பில், தனது வீட்டுக்கு முன், பேனர் வைத்துள்ளார். அதில், 'கோவிட்-19 இல்லாத, 4 பேருக்கு இருக்கு என முத்திரை குத்தி, என்னையும், என் குடும்பத்தாரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்' என, குறிப்பிட்டிருப்பதோடு, தனியார் ஆய்வகத்தில் கொடுத்த பரிசோதனை முடிவு அறிக்கையை ஸ்கேன் செய்து, அந்த பிளக்ஸில், அவர் வெளியிட்டுள்ளார்.

பிளக்ஸ் பேனர் வைத்த, இளவரசன் கூறுகையில், ''எனது தந்தை கணேசனுக்கு, 58, இருதய பாதிப்பு இருந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது, கொரோனா இல்லை என்றனர். அதே நாள், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சேர்த்தபோது, தொற்று இருப்பதாக கூறி, 'அட்மிட்' செய்தனர். மறுநாளே இறந்து விட்டார். எங்கள் வீட்டில் மற்ற நான்கு பேருக்கும் தொற்று இருப்பதாக கூறி, தகரம் அடித்து, தனிமைப்படுத்தி உள்ளனர். தனியார் லேப்பில் பரிசோதித்தபோது, நோய் இல்லை என வந்திருக்கிறது,'' என்றார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அக்குடும்பத்தை சேர்ந்த ஒருவர், கடந்த, 31ம் தேதி, கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சளி மாதிரி சேகரித்து, பரிசோதிக்கப்பட்டது. 'பாசிட்டிவ்' என, 3ம் தேதி, 'ரிசல்ட்' வந்ததால், அவர்களது வீட்டை தனிமைப்படுத்தினோம். இறந்தவருக்கு தொற்று எப்போது தாக்கியது என யாருக்கும் தெரியாது.

அதனால், அவரது தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் பரவ வாய்ப்பிருப்பதால், தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துகிறோம். 'பாசிட்டிவ்', 'நெகட்டிவ்' என, வேறுபாடு கிடையாது. உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினர், 14 நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்