Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காலாவதி உணவு பொருளில் தயாரித்த கேக்: சாப்பிட்ட 3 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதி

செப்டம்பர் 10, 2020 08:49

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் கேக் வாங்கி சாப்பிட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட மூன்று குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் நகரப் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 31 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில் 28 வயது வாலிபர் முருகன் உயிரிழந்தார். இந்நிலையில் மேலும் மூன்று குழந்தைகள் உட்கொண்ட உணவு நஞ்சாகி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு முன்பாக உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட உணவு வகை சார்ந்த நிறுவனங்களில் பயன்படுத்திவந்த அரிசி, பருப்பு, மாவு, எண்ணெய், மற்றும் மசாலா பொருட்கள் உள்ளிட்ட உணவு சார்ந்த பொருட்களை தற்சமயம் ஊரடங்கு தளர்வு முடிந்தபிறகு அதன் காலாவதி நிலைமையை கருத்தில் கொண்டு அதை அப்புறப்படுத்த வேண்டும்.

ஆனால், ஊரடங்கு சமயத்தில் எந்த ஒரு வருமானமும் இல்லாத காரணத்தினால் மிகுந்த நஷ்டத்தில் உள்ள சில தனியார் உரிமையாளர்கள் ஊரடங்கு தளர்வு முடிந்தவுடன் மீண்டும் புதிதாக வாங்கிய உணவு பொருட்களுடன் ஆறு மாதங்களுக்கு முன் இருப்பு வைத்திருந்த உணவு பொருட்களையும் சேர்த்து கலப்படம் செய்து பயன்படுத்தி அதன் ஆபத்தை உணராமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

பொதுமக்களும், கடைக்காரர் கொடுப்பதை நம்பி சிறியவர் முதல் பெரியவர் வரை உணவை உட்கொள்கிறார்கள். இதனால் பலருக்கும் உணவு நஞ்சாகி உடல் உபாதை ஏற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பிரத்தியேக குழு அமைத்து உணவு சார்ந்த பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் இடையே ஆய்வு மேற்கொண்டு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அதை தடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்