Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தண்ணீர் லாரி மோதி 4 வயது சிறுவன் பலி

செப்டம்பர் 11, 2020 05:23

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகரில் தாறுமாறாக ஓடி வந்த தண்ணீர் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் தாத்தா உடன் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

சென்னையில் தண்ணீர் லாரிகளால் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு கிண்டியில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தினசரியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தண்ணீர் லாரிகளால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தண்ணீர் லாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு வேகக்கட்டுப்பாடு வேண்டும் என்று கூறி பல பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது. உயர்நீதிமன்றமும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்றாலும் தண்ணீர் லாரி ஓட்டுநர்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலையில் சென்னை பட்டினப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி ஒன்று தாறுமாறாக ஓடி வந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி சிக்னலில் மோதி சிக்னலை சேதப்படுத்தியது. இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது இதில் தாத்தா உடன் இரு சக்கர வாகனத்தில் வந்த சிறுவன் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனையும் காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்