Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனாவிடம் இழந்த நிலம் மீட்கப்படுமா? காங்கிரஸ் தலைவர் ராகுல்

செப்டம்பர் 11, 2020 10:52

புதுடெல்லி;எல்லையில் நமது நிலத்தை சீனா அபகரித்துக் கொண்டுள்ளது. எப்போது இந்திய அரசு அவர்களிடம் இருந்து அந்த நிலத்தை மீட்கப் போகிறது. அல்லது அதுவும் கடவுளின் செயல் என்று விட்டு விடப் போகிறதா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய சீன எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் இருக்கும் சர்வதேச கட்டுப்பாட்டு கோட்டையும் தாண்டி இந்திய எல்லைக்குள் ஆக்கிரமிப்புகளை சீனா மேற்கொண்டு வருகிறது. கிழக்கு லடாக் பகுதியை குறிவைத்து சீனா காய்களை நகர்த்தி வருகிறது. ஏற்கனவே ஊடுருவலை மேற்கொண்டு இருக்கும் சீனாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டி காட்டி வருகிறார்.

சீன அதிபரிடம் ஏன் இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார். மேலும், மோசமாகி வரும் இந்தியப் பொருளாதாரம் குறித்தும் விமர்சனம் வைத்து வருகிறார். இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை இழப்பு பெரிய அளவில் ஏற்கனவே ஏற்பட்டு இருந்த நிலையில், தற்போது கொரோனா முடக்கத்திற்குப் பின்னர் இது அதிகரித்துள்ளது.

இதையும் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் ராகுல் காந்தி தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்பீக் அப் பார் வாய்ஸ் என்ற பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர். இந்த பிரச்சாரத்தில் மக்கள் அனைவரும் இணைந்து மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று ராகுல் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் மாஸ்கோவில் இந்தியா, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஐந்து அம்சத் திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி, எல்லையில்

தற்போது இணக்கமான சூழல் இல்லை. இருதரப்பு எல்லை படைகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். படைகளை வாபஸ் பெற வேண்டும். பதற்றத்தை தணிக்க வேண்டும். பதற்றத்தை அதிகரிக்கும் எந்த செயலிலும் இருதரப்பும் ஈடுபடக் கூடாது. இருதரப்பிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எல்லையில் இந்திய நிலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இவர் தனது ட்விட்டர் பதிவில் எல்லையில் நமது நிலத்தை சீனா அபகரித்துக் கொண்டுள்ளது. சீனாவிடம் இருந்து எப்போது இழந்த நிலத்தை இந்திய அரசு மீட்க இருக்கிறது. இல்லை அதுவும் கடவுளின் செயல்தான் என்று விட்டு விடுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்