Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசு அரசாணை வெளியிடு: கல்லூரி மாணவர்களின்  வயிற்றில் பாலை வார்த்த அறிவிப்பு

செப்டம்பர் 11, 2020 11:09

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றினை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியாகி உள்ள இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.கலை பாடப்பிரிவுகளுக்கு  கூடுதலாக 20 சதவீதமும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிகளுக்கு ஏற்ப கூடுதலாக  20 சதவீதமும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்துள்ளது தமிழக அரசு. நம் மாநிலத்தில், 90-க்கும் மேற்பட்ட அரசு, கலை அறிவியல் கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும் மற்றும் 
40-க்கும் மேலான பல்கலைக்கழக கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் சில மாதங்களாக லாக்டவுன் என்பதால் கல்லுாரிகள் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக, கலை அறிவியல் கல்லூரிகளில்  பயின்றவர்கள் இறுதி ஆண்டு தேர்வு எழுத முடியவில்லை.

ஊரடங்கு நீடிக்கப்படுவதால் இறுதி பருவத் தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்தது. இந்த தேர்வை ரத்து செய்ய பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதையே வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதமும் எழுதினார்.
இதனிடையே, பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான பிறகு, அரசு கல்லூரிகளில் ஆன்லைன்
மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமித்து, ஆன்லைன் மாணவர் சேர்க்கை குறித்து ஒத்திகை பார்த்து, அரசு கல்லூரி நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க, வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவுறுத்தியது.

இது மாணவர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது.. இதன்படி, அந்தந்த மாணவ,
மாணவியர் விரும்பிய பாடப்பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும், அரசு கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் திட்டமும் பாராட்டை பெற்றது.

அதேசமயம், உயர்கல்வி கற்பதற்காக கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து காத்திருப்போரின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. அவர்களால் தனியார் கல்லூரிகளிலும் அதிக கட்டணம் கட்டி படிக்க முடியாத சூழல் இந்த ஊரடங்களால் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முறை அரசு கல்லூரிகளில் படிப்பதற்காக விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இதனால்தான் மற்றொரு முக்கிய முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.

அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக 20சதவீதமும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிகளுக்கு ஏற்ப கூடுதலாக 20 சதவீதமும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்து அரசாணையும் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால், தமிழக அரசு கல்லூரி மாணவர்களின் வயிற்றில் பாலை வார்த்துவிட்டது.

தலைப்புச்செய்திகள்