Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்திடம் தேர்தல் கமிஷன் கேள்வி

செப்டம்பர் 12, 2020 09:51

சென்னை : கொரோனா அச்சுறுத்தல் நீங்காத நிலையில் தேர்தல் வந்தால் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் ஓட்டளிக்க வசதியாக கூடுதல் ஓட்டுச்சாவடிகள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எவ்வளவு தேவைப்படும் என மதிப்பீடு செய்யும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் திருவெற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் மூன்று சட்டசபை தொகுதிகள், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காலியாக உள்ளன. இவற்றில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரு லோக்சபா தொகுதிக்கும் இடைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. 

தற்போதைய சூழலில் நவம்பர் மாதத்திற்குள் பீஹார் மாநில பொதுத் தேர்தலை நடத்த வேண்டி உள்ளது. அதனுடன் சேர்த்து அனைத்து மாநிலங்களிலும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகள் மற்றும் லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

அதேபோல தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்க வாய்ப்புள்ளது. தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நீங்கவில்லை. நோய் பரவல் தொடர்ந்தபடி உள்ளது.எனவே தேர்தலின் போது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி ஓட்டளிக்க வசதியாக பல முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது.

தற்போது ஓட்டுச்சாவடிகளில் தலா 1500 வாக்காளர்கள் உள்ளனர்.இதை பிரித்து ஓட்டுச் சாவடிக்கு 1000 வாக்காளர்கள் என்றால் கூடுதலாக எத்தனை ஓட்டுச் சாவடிகள் அமைக்க வேண்டும்; அவற்றை தற்போதுள்ள ஓட்டுச் சாவடிகளில் அமைக்க இட வசதி உள்ளதா; இட வசதி இல்லையென்றால் அருகில் எங்கு அமைப்பது என்ற விபரங்களை திரட்ட வேண்டும்.கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டால் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் கூடுதலாக எவ்வளவு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவை; கூடுதலாக எவ்வளவு பணியாளர்கள் தேவைப்படுவர் என அனைத்து விபரங்களையும் தயார் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்