Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ம.க.வை தி.மு.க. கூட்டணிக்கு கொண்டுவர படுதீவிரமாக முயற்சிக்கும் துரைமுருகன்?

செப்டம்பர் 13, 2020 11:40

சென்னை:தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்த கையுடன் பாட்டாளி மக்கள் கட்சியை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என துரைமுருகன் படுதீவிரமாக முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க.வின் பொதுக்குழுவில் அக்கட்சியின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். பேராசிரியர் அன்பழகன் மறைவால் துரைமுருகன் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துரைமுருகனைப் பொறுத்தவரையில் புதிய கூட்டணிக்கான முயற்சிகளை மேற்கொள்வார் என தி.மு.க. சீனியர்கள் பலரும் எதிர்பார்த்தனர். இதன்படியே தமது செல்வாக்கை மேலும் உயர்த்தும் வகையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை துரைமுருகன் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலின் போது தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க தே.மு.தி.க. பேச்சுவார்த்தை நடத்தியது.

இன்னொரு பக்கம் அ.தி.மு.க.வுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. தி.மு.க.வுடன் தே.மு.தி.க. பேச்சுவார்த்தை நடத்திய உண்மையை ஊடகங்கள் முன்பாக போட்டு உடைத்தார் துரைமுருகன். இதனால் செம கடுப்பாகிப் போன தே.மு.தி.க. துரைமுருகனை திட்டி தீர்த்தது. இன்னமும் இந்த வசவும் நீடிக்கிறது.

தற்போது துரைமுருகனே, பா.ம.க.வுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பா.ம.க. மூத்த தலைவர் ஒருவரை அண்மையில் துரைமுருகன் சந்தித்தும் பேசியிருக்கிறார். பா.ம.க. தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளில் சிக்கல் எதுவும் இருக்காது எனவும் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

வடதமிழகத்தைப் பொறுத்தவரையில் பா.ம.க.வை கூட்டணியில் வைத்துக் கொள்ள அ.தி.மு.க தி.மு.க. இரு கட்சிகளுமே முயற்சிக்கின்றன. இன்னொரு பக்கம், ரஜினி கட்சி தொடங்கினால் அந்த கூட்டணியில் பா.ம.க.வும் இணையவேண்டும் என்பதற்கான முயற்சிகளும் முனைப்பாக இருக்கின்றனர். இருந்தபோதும் பா.ம.க. எடுக்கப் போகும் நிலைப்பாடுதான் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைப்புச்செய்திகள்