Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பணக்காரர்களுக்கு மட்டுமே மோடி காவலாளியாக உள்ளார்: பிரியங்கா

மார்ச் 19, 2019 10:06

பிரயாக்ராஜ்: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரியங்காவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

மிகவும் பலவீனமாக உள்ள இந்த 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பொறுப்பு பிரியங்காவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்வதை தவிர்த்து விட்டு இந்த 42 தொகுதிகளிலும் பிரியங்கா அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். 

முதல் கட்டமாக அவர் நேற்று உத்தரபிரதேசத்தில் கங்கையில் படகு பிரசாரத்தை தொடங்கினார். நேற்று காலை பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மனையா காட்டில் இருந்து அவர் படகு பயணத்தை தொடங்கினார். மொத்தம் 3 நாட்கள் படகில் சென்று நாளை வாரணாசியை சென்றடைய பிரியங்கா திட்டமிட்டுள்ளார். 

இந்த படகு பயணத்தின் போது ஆங்காங்கே கரையோரங்களில் உள்ள கிராம மக்களை சந்தித்து பிரசாரத்தையும் பிரியங்கா மேற்கொண்டுள்ளார். 145 கிலோ மீட்டர் தொலைவுக்கு கங்கையில் படகு பயணம் செய்யும் பிரியங்கா தினமும் மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். 

நேற்று மாலை அவர் சிர்சா பகுதியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பிரதமர் மோடியை மிக மிக கடுமையாக தாக்கி பிரியங்கா உரையாற்றினார். அவர் கூறியதாவது:- 

எனது படகு பயணத்தின் தொடக்கத்தின்போது எனது பாட்டி இந்திராகாந்தியின் நினைவு எனக்கு வந்தது. அவர் என்னை இந்த பகுதிக்கு பல தடவை அழைத்து வந்துள்ளார். 

அவர் மடியில் நான் இங்கு தலைவைத்து தூங்கி இருக்கிறேன். அப்போ தெல்லாம் அவர் என்னிடம், “பிரச்சினைகளை கண்டு பயப்படக்கூடாது. துணிச்சலுடன் போராட வேண்டும்” என்று கூறுவார். அந்த வழியில் நான் பயணிக்க தொடங்கி இருக்கிறேன். 

பிரதமர் மோடி தனது பெயருக்கு முன்பு காவலாளி என்று போட்டுக் கொண்டிருக்கிறார். எல்லோரையும் அப்படி போடும்படி சொல்கிறார். அவர் யாருக்கு காவலாளியாக இருந்துள்ளார். பணக்காரர்களுக்கு மட்டுமே அவர் காவலாளி. 

ஏழை விவசாயிகளுக்கு அவர் காவலாளியாக இருக்கவில்லை. நேற்று நான் சில விவசாயிகளை சந்தித்து பேச நேரிட்டது. அப்போது அவர்கள் விவசாயிகளுக்கு விவசாயிகள்தான் காவலாளி. வேறு யாரும் அல்ல என்று தெரிவித்தனர். இதை மோடி உணர்ந்து கொள்ள வேண்டும். 

உத்தரபிரதேசத்தில் வளர்ச்சி திட்டபணிகள் மேற்கொள்ளப்பட வில்லை. எந்த நலத்திட்ட பணிகளும் முறையாக நடக்கவில்லை. அனைத்து துறைகளிலும் பா.ஜனதா அரசு தோல்வி அடைந்து இருக்கிறது. 

இந்த குறையை திசை திருப்பவே பிரிவினை அரசியலை அவர்கள் நடத்துகிறார்கள். ஜாதி, மதத்தை பெரிதாக காட்டி பிரச்சினைகளை மக்கள் மத்தியில் இருந்து மறைக்கிறார்கள். இந்த நிலைமாற வேண்டும். 

உத்தரபிரதேசத்தில் இப்போதைய நிலையை மாற்ற என்னால் முடியும். இங்குள்ள மக்களை நான் நன்கு அறிந்துள்ளேன். எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள். 

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மாநிலத்தின் தலைவிதியை மாற்றலாம். இவ்வாறு பிரியங்கா ஆவேசமாக பேசினார்.

தலைப்புச்செய்திகள்