Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேச்சியம்மன் கோயிலில் மனமுருக வழிபாடு பூஜையில் ஓ.பி.எஸ். வைத்த முக்கியக் கோப்பு

செப்டம்பர் 14, 2020 10:08

விருதுநகர்:துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குலதெய்வக் கோயிலில் மனமுருக வழிபாடு நடத்தி முக்கிய கோப்புகள் சிலவற்றை அங்கு வைத்து எடுத்துச்சென்றுள்ளார். கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனது குலதெய்வமான பேச்சியம்மன் கோயிலுக்கு ஓ.பி.எஸ். செல்வது வழக்கம். அந்தவகையில் கடந்த சனிக்கிழமை அவர் இந்த கோயிலுக்கு சென்றதை அடுத்து அ.தி.மு.க. வட்டாரத்தில் இதுபற்றித் தான் விவாதிக்கப்படுகிறது.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அண்மைக்காலமாக தீவிர அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியே காணப்படுகிறார். அதேபோல் தேனி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் துணை முதல்வர் என்ற அடிப்படையில் அவரை காண முடிவதில்லை. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் கூறிய கருத்து அவருக்கு தர்மசங்கடத்தை அளித்தது.
இதனிடையே தற்போது கொரோனா பரவல் காரணமாக சென்னையில் இருப்பதை பெரும்பாலும் தவிர்த்து சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திலேயே அதிக நாட்கள் ஓ.பி.எஸ். தங்க தொடங்கினார். இந்நிலையில் நேற்று தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள அவர், கடந்த சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்டம் செண்பகத்தோப்பு அருகே உள்ள பேச்சியம்மன் கோயிலில் விஷேச பூஜை நடத்தியுள்ளார். அப்போது முக்கியக் கோப்புகள் சிலவற்றையும் கோயிலில் வைத்து எடுத்துச்சென்றுள்ளார். 

முன்னதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. அதைத் தொடர்ந்து கோயில் யானைக்கு தனது கையால் உணவு வழங்கி ஓ.பி.எஸ் மகிழ்ந்தார். இதனிடையே விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வரவேற்க செல்லாதது கவனிக்கத்தக்கது. அண்மையில் மீண்டும் எடப்பாடியார் தான் முதல்வர் என ராஜேந்திரபாலாஜி பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது. 

துணை முதல்வர் ஓ.பி.எஸ். கோயிலில் வைத்து எடுத்துச்சென்ற கோப்பு என்னவாக இருக்கும் என அவரது பின் தொடர்பாளர் ஒருவரிடம் பேசிய போது, '' கொரோனா காரணமாக 5 மாதங்களுக்கு மேல் கோயில் மூடப்பட்டு இப்போது திறக்கப்பட்டுள்ளது. இதனால் தரிசனம் செய்ய ஓ.பி.எஸ். சென்று வந்தார். இதைத்தவிர வேறு காரணம் இல்லை. நீங்கள் கேட்கும் கோப்பை பற்றி எனக்குத் தெரியாது. ஒரு வேளை துணை நிதி நிலை அறிக்கையாக இருக்கலாம் அல்லது நிர்வாகிகள் மாற்றம் தொடர்பான கோப்பாக இருக்கலாம்,'' என்றார்.
 

தலைப்புச்செய்திகள்