Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2021 ஜனவரி 27-ல் சிறையிலிருந்து சசிகலா விடுதலை

செப்டம்பர் 15, 2020 09:46

பெங்களூரு:வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறையில் உள்ள சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27-ல் விடுதலையாகலாம் என ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெங்களூரு சிறையில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி முதல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கணவர் மரணம் உள்ளிட்டவைக்காக ஓரிருமுறை பரோலில் மட்டுமே சசிகலா வெளியே வந்தார். சிறைக்குள் நடத்தை விதிகளை மீறி சசிகலா ஷாப்பிங் போனது என பெரும் சர்ச்சையானது. இன்னமும் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராதத்தை செலுத்தவில்லை என தகவல் வெளியானது. இதனால் சசிகலா விடுதலை தாமதமாகும் எனவும் கூறப்பட்டது. ஆனால் சசிகலா அக்டோபர் மாதம் நிச்சயம் விடுதலையாகிவிடுவார் என அவரது வழக்கறிஞர் நம்பிக்கையுடன் கூறியிருந்தார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போது அ.தி.மு.க.வில் மிகப் பெரிய பிரளயம் ஏற்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இருப்பினும் சசிகலா எப்போது விடுதலையாவார்? என்பதில் குழப்பம் நீடித்தது. இன்னொரு பக்கம், என்னதான் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வந்தாலும் அ.தி.மு.க.வில் அவரோ அவரது குடும்பத்தினரோ சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என அமைச்சர்கள் திட்டவட்டமாகவும் கூறி வருகின்றனர்.

இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி ஆர்.டி.ஐ. மூலம் சசிகலாவின் விடுதலை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் பெங்களூரு சிறை நிர்வாகம், 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ல் சசிகலா விடுதலையாகலாம் என தகவல் அனுப்பி உள்ளது. இது சசிகலா ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்