Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

யாருக்கு ஓட்டுபோட்டோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு கருவி செயல்படும் விதம் குறித்து விழிப்புணர்வு

மார்ச் 19, 2019 10:32

கோவை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடி அமைக்கும் பணி, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி, ஊழியர்களுக்கு பயிற்சி உள்ளிட்டவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 
 
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறுதி செய்து ஒப்புகை சீட்டு காண்பிக்கும் கருவி(வி.வி.பி.ஏ.டி.) குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மட்டும் வைக்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு எந்திரத்துடன், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறுதி செய்யும் கருவி வைக்கப்படுகிறது. 

கோவை நாடாளுமன்ற தொகுதி, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி ஆகிய 2 தொகுதிகளுக்கும் மொத்தம் 3,072 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு எந்திரத்துடன், ஒப்புகை சீட்டு கருவியும் பொருத்தப்படுகிறது. 

இந்த கருவி செயல்படும் விதம் குறித்து, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் பலகை அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விளக்கப்படுகிறது. மேலும் பொது இடங்களிலும் ஓட்டுப்பதிவு எந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு கருவி ஆகியவற்றை வைத்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது. 

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:- 

வாக்காளர் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் வேட்பாளரின் சின்னம் ஆகிய விவரங்கள் அடங்கிய அச்சிட்ட தாளை 7 வினாடிகளுக்குள் அந்த கருவியில் பார்க்கலாம். இதன் மூலம் வாக்காளர் யாருக்கு ஓட்டு போட்டார் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் வாக்காளர்களுக்கு ரசீது வழங்கப்பட மாட்டாது. இந்த ரசீதுகள் அனைத்தும் பத்திரமாக பாதுகாக்கப்படும். தேர்தல் வழக்கு விசாரணையின்போது முக்கிய ஆவணமாகவும் இந்த ரசீது சமர்ப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

தேர்தல் விழிப்புணர்வு வாகனம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளது. இந்த வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடியோ திரை மூலம், பொது இடங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. 

ஓட்டுப்பதிவு எந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு கருவி ஆகியவை செயல்படும் விதம் குறித்தும் பொது இடங்களில் விளக்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்