Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தி, ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழிகள் வைகோ கேள்விக்கு மத்திய அரசு திட்டவட்டம்

செப்டம்பர் 16, 2020 08:25

புதுடெல்லி:''இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழி,''  என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தியை மத்திய அரசு திணித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில்தான், "ஹிந்தி தெரியாது போடா" என்று எழுதப்பட்ட டீ-சர்ட்டைகளை அணிந்து பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்கள் புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். கர்நாடக மாநிலத்திலும் இந்தித் திணிப்புக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தி தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நாளில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் கன்னட அமைப்புகள் இணைந்து ஹிந்தி பெயர் பலகைகளுக்கு தார்பூசி அளித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்தியை மத்திய அரசு முன் நிறுத்துவதற்கு ஒரு முக்கியமான காரணம், இந்தியாவின் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது தான். இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் இந்தியாவின் அலுவல் மொழியாக உள்ளன. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் இந்த அந்தஸ்தை பெறவில்லை. எனவேதான் தமிழ் உள்ளிட்ட இந்தியாவில் அதிகமாக பேசப்படும் 22 மொழிகளை அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக ராஜ்யசபாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சக இணை அமைச்சர், நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.

அந்த பதிலில் இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும்தான் அலுவல் மொழி பிற மொழிகளை அலுவல் மொழியாகவும் திட்டம் எதுவும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில மொழிகளுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டவில்லை. இப்போதுள்ள நிலைமை தான் நீடிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், 1968ம் ஆண்டு, அலுவல் மொழி தீர்மானத்தின், 3வது பாயிண்ட்படி, பிராந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில், பெயர் பலகை, நோட்டீஸ்கள் உள்ளிட்டவற்றை வெளியிட மும்மொழி கொள்கையில் வழி செய்யப்பட்டுள்ளது என்றும், உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய அலுவல் மொழிகள் சட்டம் 1963ம் ஆண்டு இயற்றப்பட்டது. பிறகு 1976, 1987, 2007 ஆகிய ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த சட்ட விதிகள் தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களுக்கும் முழுமையாகப் பொருந்தும். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழை அலுவல் மொழியாக ஆக்கிக் கொள்ளும் வசதி உண்டு. இந்தி மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே அலுவல் மொழியாக்க வேண்டிய கட்டாயம் இங்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்