Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராமநாதபுரம்- அழகன்குளம் அகழாய்வு பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க எதிர்ப்பு

செப்டம்பர் 17, 2020 06:41

ராமநாதபுரம்:கீழடி போல 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தின் சான்றுகளைக் கொண்ட அழகன்குளம் அகழாய்வுப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள, அழகன்குளம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னால், எண்ணெய் - எரிவாயு எடுப்பதற்காக அழகன்குளத்தில் இடங்களை ஓ.என்.ஜி.சி. கையகப்படுத்தியது. ஆனால், இப்போது அவசரம், அவசரமாக எண்ணெய்க் கிணறுகளை அமைக்க வேலைகளைத் தொடங்குகிறது. இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அழகன்குளத்தில் ஆய்வு செய்து, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சான்றுகளைக் கண்டு உலகுக்கு அறிவித்தது. வைகை ஆற்றின் கரையில், வங்காள விரிகுடா கடற்கரையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அழகன்குளத்தில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைக்கக்கூடிய அதே தடயங்கள், நகரங்கள் இருந்ததை நிரூபிக்கும் கட்டுமானங்கள் புதைந்து கிடக்கின்றன. கடந்த 1980ம் ஆண்டுகளில் முதன்முறையாக அழகன்குளம் அகழ்வாய்வு நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த அகழ்வாய்வில் ஆர்வம் காட்டி அகழ்வாய்வைத் தொடருமாறு 01.09.2016 அன்று ஆணையிட்டார்.

இங்கு சிவகங்கை மாவட்டத்து கீழடியை விஞ்சும் வகையில் கட்டுமானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. கி.மு.375 -க்கு முந்தைய, மத்திய தரைக்கடலை ஒட்டி இருக்கக்கூடிய நாடுகளில் புழங்கப்பட்ட மண் ஓடுகள், மட்பாண்ட சில்லுகள், ஜாடிகளின் உடைந்த துண்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறிப்புகளைக் கொண்ட சிவப்பு நிற ஓடுகள், நாணயங்களின் முன்புறத்தில் உரோமானிய மன்னரின் முகமும், பின்புறம் உரோமானியர்களின் வெற்றி தேவதையின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் அகழ்வாய்வில் எடுக்கப்பட்டன. அழகன்குளத்தில் அகழ்வாய்வில் பெறப்பட்ட நாணயங்கள் உரோமப் பேரரசன் இரண்டாம் வேலன்டினியன் காலத்தில் வெளியிடப்பட்டு இருக்கலாம். பாண்டியர்களுக்கும், உரோமானியர்களுக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்பை இது அறிவிக்கிறது. அழகன்குளத்தில் மத்தியதரைக்கடல் நாடுகளிலிருந்து வந்த வணிகர்களின் குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தமிழரின் பாரம்பரிய பெருமையை நிரூபணம் செய்கின்ற இந்த அழகன்குளம் இப்போது எண்ணெய் - எரிவாயு நிறுவனங்களால் சின்னாபின்னம் ஆக்கப்பட இருக்கிறது. இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும். 1492 -இல்தான் அமெரிக்கா என்ற கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு அந்த பகுதியில் கப்பல்கள் மூழ்கிக் கிடக்கின்றன என்ற காரணத்தினால், அமெரிக்க அரசு பல பகுதிகளில் கடலில் எண்ணெய் - எரிவாயு கிணறுகள் அமைக்கத் தடை விதித்துள்ளது. அப்படி அமைத்தால், அது கடலுள் அமிழ்ந்து கிடக்கும் தொல்லியல் சான்றுகளை அழித்துவிடும் என்று எண்ணெய் எரிவாயு எடுப்புக்குத் தடை விதித்துள்ளது. வெறும் 600 ஆண்டுகால வரலாற்றுத் தடயங்களைக் காப்பதற்கு அமெரிக்க அரசு இவ்வளவு முயற்சிகளை மேற்கொள்ளும்போது, 2,500 ஆண்டுகாலப் பழந்தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றுத் தடயங்களை அழியக் கொடுப்பது எவ்வளவு தவறானது? அனைத்து மக்களும் களமிறங்கி நம்முடைய தொல்லியல் சான்றுகளை, பண்பாட்டுச் சுவடுகளை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு பேராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். 


 

தலைப்புச்செய்திகள்