Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை - 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

செப்டம்பர் 17, 2020 08:05

தஞ்சாவூர்:தஞ்சை அருகே உள்ள துருசுப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் வீரையன்(வயது 38). கூலி தொழிலாளி. இவருடைய வீட்டின் அருகே வசித்து வருபவர் குருநாதன். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் குருநாதன் மனைவி சித்ராவை, வீரையன் திட்டியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து வீரையன் வீட்டுக்கு சென்ற குருநாதன் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீரையனுக்கு குருநாதன் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வீரையன் வீட்டின் மீது சிலர் கல் எறிந்து உள்ளனர். சத்தம் கேட்டு வீரையன் மனைவி வீரச்செல்வி (35) தூக்கத்தில் இருந்து எழுந்து, வீரையனை எழுப்பினார். பின்னர் வீரையன் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது வெளியே மறைந்திருந்த குருநாதன் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் சேர்ந்து வீரையனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.  இதை பார்த்த வீரச்செல்வி அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஆட்கள் வருவதற்குள் குருநாதன் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதைத்தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த வீரையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த வீரையன் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து வீரச்செல்வி செங்கிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குருநாதன் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் என 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்