Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடி முதல் கருணாநிதி வரை உளவு பார்த்தது சீனா

செப்டம்பர் 18, 2020 06:49

புதுடெல்லி:இந்தியாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர், இந்நாள், முன்னாள் முதல்வர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், வர்த்தக நிறுவனங்களின் தகவல்களை சீன அரசு நிறுவனமான ஷென்சென் ஷென்ஹூவா உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் விளக்கம் கேட்டிருந்தார். இந்தியாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிகள், சோனியா காந்தி அவரது குடும்பத்தினர், தற்போது முதல்வர்களாக இருக்கும் மம்தா பானர்ஜி, அமரிந்தர் சிங் உள்பட 15 முதல்வர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரை சீன நிறுவனம் உளவு பார்த்ததாக கூறப்பட்டு இருந்தது.

இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுத்துபூர்வ விளக்கம் அளித்து இருந்தார். அதில், ''இந்தியாவில் சீன நிறுவனம் உளவு பார்த்தது தொடர்பாக இந்திய வெளி விவகாரத்துறையின் மூலம் சீன தூதரகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. பீஜிங்கில் இருக்கும் நமது தூதரகமும் இதுகுறித்து சீன வெளியுறவுத்துறையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது. ஷென்சென் ஷென்ஹூவா நிறுவனம் தனியார் நிறுவனம் என்று சீனா விளக்கம் அளித்துள்ளது. மேலும் அந்த நிறுவனத்துடன் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய குடிமக்களின் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாப்பதில் மத்திய அரசு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது. கவனம் செலுத்தி வருகிறது. தனிப்பட்ட நபர்களின் விஷயத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது அரசுகள் தலையிடுவது குறித்து மத்திய அரசு கவலை கொண்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்கு தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரின் கீழ் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டி இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளும். சட்டத்திற்கு மீறி நடந்து கொண்டுள்ளதா?  என்பது குறித்து அறிந்து, 30 நாட்களுக்குள் பரிந்துரைகளை அனுப்பும்'' என்று தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து விளக்கம் அளித்து இருந்த காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், ''எதாவது சட்டத்தை மீறி நடந்து இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். இப்படி கேட்பதால் நாங்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது,'' என்று தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் சீனாவின் அத்துமீறல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து இருந்தார். இதுகுறித்து பேசுவதற்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கேட்டது. ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, லோக்சபாவில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. ''நாங்களும் ராணுவ வீரர்களுக்கு துணையாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கவும், சீனாவுக்கு எச்சரிக்கை விடுவதற்கும் நேரம் கேட்டு இருந்தோம். ஆனால், மறுக்கப்பட்டுள்ளது என்று அதிர் ரஞ்சன் தெரிவித்தார். 
 

தலைப்புச்செய்திகள்