Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தலில் களம் காண தமிழக காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் முகாம்

மார்ச் 20, 2019 06:33

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கிருஷ்ணகிரி, கரூர், தேனி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி தலைமையிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு பட்டியலை சமர்ப்பித்து இருக்கிறார். 

 
அந்த பட்டியல் நேற்று மாலை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பரிசீலனையில் ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பேரின் பெயர்கள் தேர்வு செய்யப்படும் என்றும், அந்த இருவரில் ஒருவரை ராகுல்காந்தி இறுதி செய்வார் என்றும் அகில இந்திய காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதனால் 9 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள் பலர் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் இருந்து 50 க்கும் மேற்பட்டவர்கள் குவிந்து உள்ளனர். இந்த தொகுதிக்கு கடும் போட்டி நிலவுகிறது. நெல்லை தொகுதி முன்னாள் எம்.பி. ராமசுப்பு இந்த முறை கன்னியாகுமரி தொகுதியை கேட்டு டெல்லியில் தங்கி இருக்கிறார். நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமாரும் அதீத நம்பிக்கையில் காங்கிரஸ் அலுவலகத்தில் காத்து கிடக்கிறார். 

திருவள்ளூர் தொகுதியை எதிர்பார்த்து முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் டெல்லியில் தங்கி உள்ளார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு உள்ளிட்டோரும் டெல்லியிலேயே முகாமிட்டு இருக்கின்றனர். 

இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் அதை வரவேற்கிறோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இந்தியாவை மேலும் வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்லும் திட்டங்கள் அதில் இருக்கும். தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த பட்டியலில் பெண்களுக்கும் நிச்சயம் வாய்ப்பு உண்டு. தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல்காந்தி மீண்டும் தமிழகத்துக்கு வருவார் என்றார். 

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயிலில் உள்ள 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்களா? என்ற கேள்விக்கு கே.எஸ்.அழகிரி பதில் அளிக்கையில், ‘‘கோர்ட்டு என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் சில அமைப்புகள், தனி நபர்கள் மற்றும் கட்சிகள் அவர்களை விடுதலை செய்ய சொல்வது தவறான அணுகுமுறை. அது நாட்டின் சட்டம் ஒழுங்கையே கெடுத்து விடும்’’ என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்