Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்- தலைமை செயலாளர் உத்தரவு

செப்டம்பர் 19, 2020 09:06

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்க உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்டு உள்ள ஆயத்த பணிகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் க.சண்முகம் தலைமையில் நேற்று விரிவான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபடும் பல்வேறு துறை அலுவலர்களது செயல்திறன்களை மேம்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் கடலோர அபாய குறைப்பு திட்டத்தின் முன்னேற்றம் உள்பட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, தமிழக அரசின் அனைத்துத் துறை செயலாளர்கள், விமானப்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த அதிகாரிகள், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

* கூட்டத்தில் தலைமை செயலாளர் க.சண்முகம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள், அறிவுரைகள் மற்றும் சில உத்தரவுகளையும் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-

* பேரிடர் காலங்களில் நடத்தப்படும் மாதிரி பயிற்சிகள் சமூக இடைவெளியை பின்பற்றி 50 பேருக்கு மிகாமல் பயிற்சி அளிக்க வேண்டும்.

* பேரிடர் காலங்களில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் குறிப்பாக வெளியில் செல்லும்போதும், பொது இடத்தில் தங்க வைக்கும் போதும், பயணிக்கும் போதும் முககவசம் கட்டாயமாக அணிந்து கொள்ள வேண்டும்.

* தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கூட்டம் கூடுதலை தவிர்க்க வேண்டும்.

* பொதுமக்களுக்கு பேரிடர் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள், குறும்படங்கள் மற்றும் ஒலி, ஒளி பதிவுகள் மூலம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* ஏற்கனவே கண்டறிந்து வைத்துள்ள நிவாரண முகாம்கள் சமூக இடைவெளியுடன் தங்க வைக்க போதுமானதாக உள்ளதா? என ஆய்வு செய்து, தேவைப்படின் நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

* வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு 37 மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சென்னை மாநகரின் 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆயத்த பணிகளை கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

* மேலும், பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பினை துரிதப்படுத்த முன்னெச்சரிக்கை கருவிகள் ( EWS) பேரிடர் குறித்த அறிவிப்பு கருவி மற்றும் TN SMART என்ற செயலி ஆகியவை கொண்டு அவசர மீட்பு முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

* கஜா மற்றும் வார்தா புயலில் ஏற்பட்ட பாதிப்புகளால் நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அடிப்படையில் கடலோர மாவட்டங்களில், வானிலை ஆய்வு மையம் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் அறிவுறுத்தப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

* வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும், குறைக்கவும் அனைத்து துறையினைச் சார்ந்த செயலாளர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

* மாநில மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம், TNSMARTசெயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு வடகிழக்கு பருவமழை குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* வடகிழக்கு பருவமழை காலத்தில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத்துறை,காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, மீன்வளத் துறை, உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்