Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் டிசம்பர் மாதம் டூரை தொடங்கும் பிரேமலதா

செப்டம்பர் 20, 2020 07:18

சென்னை:தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசி அவர்களை தேர்தலுக்கு தயார் படுத்தும் பணியை பிரேமலதா விஜயகாந்த் தொடங்க இருக்கிறார். பிரேமலதாவுடன் அவரது தம்பி எல்.கே.சுதீஷ், மூத்த மகன் விஜய பிரபாகரன், மற்றும் தே.மு.தி.க. முன்னணி நிர்வாகிகளான பார்த்தசாரதி, அழகாபுரம் மோஜன்ராஜ் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவும் இந்த டூரில் கலந்துகொள்கிறது. வரும் டிசம்பர் மாதம் இந்தப் பயணத்தை தொடங்கும் பிரேமலதா அடுத்த மூன்று மாதங்களுக்கு பிப்ரவரி வரை தொடர்ந்து பயணிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்போதே அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள். நிர்வாகிகள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டங்கள் என அனைத்து அரசியல் கட்சி அலுவலகங்களும் பரபரக்கத் தொடங்கிவிட்டன. கொரோனா பரபரப்பு மெல்ல ஓயத்தொடங்கி தேர்தல் பரபரப்பு தொடங்கியுள்ளது. அந்தவகையில் சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்தும் வகையில் அவர்களை நேரில் சென்று சந்தித்து ஊக்கமும், உற்சாகமும் அளிக்க பிரேமலதா விஜயகாந்த் டூர் புரோகிராம் ஒன்றை தயார் செய்து வருகிறார். மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மட்டுமல்லாமல் ஒன்றியம், கிளைக்கழகம் வரையிலான நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேசி கட்சி வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிட திட்டமிட்டிருக்கிறார்.

பிரேமலதா விஜயகாந்துடன் 10 பேர் கொண்ட குழுவும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ள உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த சுற்றுப்பயணம் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. தே.மு.தி.க.வை பொறுத்தவரை எப்போதும் தேர்தல் நெருக்கத்தில் தான் பிரச்சாரம், கூட்டணி நிலைப்பாடு பற்றியெல்லாம் முடிவெடுக்கும். ஆனால் இந்தமுறை பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்குவதுடன் யாருடன் கூட்டணி? என்பதையும் ஜனவரி மாதமே அறிவிக்க இருக்கிறது.

இதனிடையே தேர்தல் நேரத்தில் விஜயகாந்தை மைக் பிடித்து பேச வைப்பதற்காக அவருக்கு பேச்சுப் பயிற்சி தீவிரமாக அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை பிசியோதெரபி மருத்துவர்கள் குழு முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். ஆங்கில மருத்துவத்துடன் அக்குபஞ்சர் சிகிச்சை முறையும் விஜயகாந்துக்கு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தலைப்புச்செய்திகள்