Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாய மசோதா வாக்கெடுப்பில் குளறுபடி?  எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

செப்டம்பர் 21, 2020 06:02

புதுடெல்லி:ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட விவசாய மசோதாக்கள் மீதான குரல் வாக்கெடுப்பில் குளறுபடி நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளது. இதனால் ராஜ்யசபா துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய மசோதாக்கள் பெரிய அளவு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தி.மு.க. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து இருக்கிறது.

லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ராஜ்ய சபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சட்ட மசோதா குறித்து போதிய விவாதம் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த மசோதாவின் நகலை கிழித்து எதிர்கட்சிகள் போராட்டம் செய்தனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. ஆனால் இந்த அமளிக்கு இடையிலும் மசோதா மீதான வாக்கெடுப்பை ராஜ்யசபா துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் நடத்தினர். குரல் வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பு நடந்தது. இதில் மசோதாவிற்கு ஆதரவாக அதிக எம்.பி.க்கள் குரல் கொடுத்ததாக கூறி மசோதாவை நிறைவேற்றியதாக ராஜ்யசபா துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அறிவித்தார். இதனால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.

அதன்பின் ராஜ்யசபா துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் நேர்மையாக செயல்படவில்லை. வாக்கெடுப்பில் அவர் முறைகேடு செய்துவிட்டார். மசோதாவிற்கு போதுமான ஆதரவு இல்லை என்று கூறி, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியேற மறுத்து தற்போது உள்ளேயே இருந்தனர். மத்திய அரசு தாக்கல் செய்த 3 மாசோதாக்கள்தான இந்த சர்ச்சைக்கு காரணம்.

விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) மசோதா, 2020, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020 ஆகிய மசோதாக்கள் பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்