Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. தே.மு.தி.க. டாட்டா

செப்டம்பர் 22, 2020 05:30

சென்னை: தமிழ்நாட்டில் மக்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வந்தால் நமது நிலை முன்னேறும் என்று பா.ம.க நிறுவனர்  ராமதாஸ் கூறியுள்ளார். தே.மு.தி.க.வும் வரும் தேர்தலில் தனித்து போட்டியிடும் மனநிலையில் உள்ளது. அ.தி.மு.க. கூட்டணிக்கு அவர்கள் டாட்டா காட்டும் மனநிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் கல்வி, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். அதற்காக தமிழக மக்கள் ஒருமுறை பா.ம.க.விற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் ராமதாஸ் ஆட்சிக்கு வருவது பற்றி பேசியுள்ளதால் கூட்டணியில் இருந்து விலகி கடந்த சட்டசபை தேர்தலைப் போல தனித்து போட்டியிட முடிவு செய்து விட்டாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எழுதிய, 'சுக்கா..., மிளகா..., சமூகநீதி?' என்ற புத்தக வெளியிட்டு விழா அவரது முன்னிலையில் அக்கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமையில் இணையதளம் வாயிலாக நடைபெற்றது. விழாவில் பேசிய  ராமதாஸ், அனைவருக்கும் முழுமையான சமூகநீதி கிடைக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார்.

வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் அனைத்திலும் சமவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் சமவாய்ப்பு ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும். அனைத்து தரப்பினருக்கும் முழுமையான சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நான், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி போன்றவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதுகுறித்து இதுவரை அரசாங்கம் நம்மை அழைத்து பேசவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி நாம் கேட்டுக்கொண்டே இருப்பது?.  தமிழ்நாட்டில் மக்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வந்தால் நமது நிலை முன்னேறும். கல்வி, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். அதற்காக பா.ம.க.வுக்கு தமிழக மக்கள் ஒருமுறை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அன்புமணி ராமதாஸ் சிறப்பான பல திட்டங்களை வைத்திருக்கிறார். அவற்றை தொகுதி அளவிலும், கிராம அளவிலும், வீடுவீடாகவும் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு செல்வதன் மூலம் மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

கடந்த சட்டசபை தேர்தலில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பா.ம.க. தனித்து போட்டியிட்டது. அ.தி.மு.க. தி.மு.க. உடன் ஒருபோதும் இனி கூட்டணி கிடையாது என்று பகிரங்கமாக அறிவித்தார் ராமதாஸ். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது பா.ஜ.க.,அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் .கூட்டணியில் இணைந்தது பா.ம.க.. இதனடிப்படையில்தான் அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை விட்டுக்கொடுத்தது அ.தி.மு.க..

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ம.க.வின் மனநிலையில் மாற்றம் தென்பட்டு வருகிறது. எந்த கூட்டணியில் யார் யார் என்று இன்னமும் எந்த கட்சியினரும் உறுதி செய்யவில்லை இந்த நிலையில் பா.ம.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று பேசியுள்ளார் ராமதாஸ். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு..தி.க. தனித்து களமிறங்கும் என்று ஏற்கனவே கூறியுள்ளார் பிரேமலதா. தற்போது பா.ம.க.வும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாகவே தெரிகிறது. 

தலைப்புச்செய்திகள்