Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கார்ப்பரேட் கள்ள சந்தைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவா?-புதுச்சேரி முதல்வர் கேள்வி! 

செப்டம்பர் 23, 2020 06:53

புதுச்சேரி: கார்ப்பரேட் முதலாளிகளின் கள்ள சந்தைக்கு தமிழக முதல்வர் ஆதரவளிக்கிறாரா?''  என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு பல்வேறு எதிர்ப்புக்கிடையே மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக விவசாயிகள், இயக்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தி.மு.க. தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. இந்த சட்டம் இயற்ற தமது ஆதரவை நாடாளுமன்றத்தில் வழங்கியது. இதற்கு தமிழக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் புதுச்ச்சேரி முதல்வர் நாராயணசாமியும் தமிழக முதல்வரை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் பேசியதாவது:

கார்ப்ரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் சந்தை, மண்டிகளை ஒழிக்கும் சட்டங்கள் இவை. மாநில அரசுகள் விவசாயிகளுக்கு தரும் மானியங்கள் தடுத்து நிறுத்தப்படும்.  புதுச்சேரியில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் இணைந்து வரும் செப்டம்பர் 28ம் தேதி புதுச்சேரி, உழவர்கரை, பாகூர், காரைக்கால் என பல்வேறு மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

விவசாய சட்டங்களுக்கு தமிழக முதல்வர் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், “மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை ஆதரிக்கும் தமிழக முதல்வருக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரியவில்லை. கார்ப்ரேட் முதலாளிகளின் கள்ள மார்க்கெட்டிற்கு தமிழக முதல்வர் ஆதரிக்கிறாரா? பதில் சொல்லட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்