Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எல்லையில் தந்திரத்தை மாற்றிக் கொண்ட சீனா டோக்லாமில் 13 ராணுவ தளங்களை அமைக்கிறது 

செப்டம்பர் 23, 2020 07:21

பெய்ஜிங்: சீனா, பூடான், இந்தியா இடையே ஏற்கனவே சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் டோக்லாம் பகுதியில் சீனா 13 ராணு தளங்களை அமைத்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கிழக்கு லடாக்கில் ஏற்கனவே சிக்கல் உருவாகி இருக்கும் நிலையில், இது தற்போது புதிய சிக்கலை இந்தியாவுக்கு உருவாக்கி இருக்கிறது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. மாஸ்கோவில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 5 அம்ச திட்டம் கையெழுத்தானது. இதன்படி தற்போது எல்லையில் மேலும் இருதரப்பிலும் கூடுதலாக படைகளை குவிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டில் இந்தியா, சீனா, பூடான் இடையே சிக்கலுக்கு உள்ளான டோக்லாம் பகுதியில் சீனா 13 ராணுவ தலங்களை அமைத்து வருவதாக அமெரிக்க உலக பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இது தெரிவித்து இருக்கும் தகவலில் மூன்று விமான தளங்கள், ஐந்து நிரந்தர விமான தளங்கள், ஐந்து ஹெலிகாப்டர் தளங்களை அமைத்து வருவதாக தெரிவித்துள்ளது.

இங்கு ராணுவத்தை பலப்படுத்துவதன் மூலம் மீண்டும் எல்லையில் தனது தந்திரத்தை சீனா மாற்றிக் கொண்டு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக்கில் தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், தனது நிலைப்பாட்டை டோக்லாம் பகுதிக்கு மாற்றிக் கொண்டுள்ளது. 

சிக்கிம்- பூடான், திபெத் எல்லையில் டோக்லாம் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு சீனா 73 நாட்களுக்கு ராணுவத்தை நிறுத்தி இந்திய ராணுவ வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டது. இந்திய ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி இருந்தது. முன்பு தெற்கு டோக்லாம் பகுதியில் மோதல் ஏற்பட்டது. இங்கு ஜாம்பெரி ரிட்ஜ் பகுதியில் இருக்கும் மோட்டார் வாகன சாலையை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்தது. இதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து இருந்தனர். தற்போது வடக்கு டோக்லாம் பகுதியில் ராணுவ தலங்களை அமைத்து வருகிறது.

இந்தப் பகுதியில் இருக்கும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் புதிய சாலை, லிங்க் சாலை, ஹெலிபேட், பாலங்கள் அமைப்பது என்று சீனா பிஸியாக இருக்கிறது. லாசா-கோங்கர் பகுதியில் கூடுதல் படைகளை குவித்துள்ளது. டோக்லாம் பகுதி பூடானுக்கு உட்பட்டது. இந்தியா இதை உரிமை கோரவில்லை. ஆனால், இங்கு சீனா அமைத்து வரும் சாலைப் பணிகளுக்கு இங்கு இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது.

இது இந்தியாவுக்கு எல்லையில் பாதகமாக அமையும். சிக்கிம் வழியாக இந்திய எல்லைக்குள் சீனா எப்போது வேண்டுமானாலும் நுழையலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இதனால், பூடானுக்கு ஆதரவாக இந்தியா இங்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. டோக்லாம் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று சீனா ஏற்கனவே வரைபடத்திலும் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தின் எல்லையில் சில பகுதிகளை சீனா ஏற்கனவே ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் நிலையில், தற்போது சிக்கிம் வழியாக வடகிழக்கு மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக சீனா ராணுவ தளங்களை குவித்து, இந்தியாவுக்கு மிரட்டலை விடுத்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்