Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரேஷன் கடைகளில் 1ம் தேதி முதல் கைரேகை: கலெக்டர் அறிவிப்பு

செப்டம்பர் 23, 2020 09:37

கடலூர்:''கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வருகிற  அக்டோபர் 1ம் முதல் கைரேகை பதிவுசெய்யும் எந்திரம் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்படும்',''  என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ரேஷன் கடைகளுக்கு கைரேகை பதிவு செய்யும் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கைரேகை பதிவு செய்யும் எந்திரங்களை வழங்கி பின்னர் அவர் கூறியதாவது:

பொது வினியோக திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் அனைத்து மாவட்டங்களிலும் பயோ மெட்ரிக் கைரேகை பதிவு எந்திரத்தினை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில், அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்ள விற்பனை முனைய எந்திரத்தில், கைரேகை பதிவு செய்யும் கருவி பொருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணி வருகிற 30ம் தேதிக்குள் முடிக்கப்படவுள்ளது.

தற்போது அடுத்த மாதத்திற்கான (அக்டோபர்) அத்தியாவசிய பொருட்கள் 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதால், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை பதிவுசெய்யும் எந்திரத்தினை பயன்படுத்தி பொருட்கள் வழங்கப்படும். இதனால் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள, குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் ரேஷன் கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் கைரேகை பதிவு எந்திரத்தில், கைரேகையை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம்.

விற்பனையாளர்கள் ஒவ்வொரு முறையும் பொருட்கள் வழங்கும் முன்பு கிருமிநாசினி கொண்டு கைரேகை பதிவுசெய்யும் எந்திரத்தை சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல் பொருட்கள் வாங்க வருபவர்கள், தங்களது விரல்களை கடையில் வைக்கப்பட்டிருக்கும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தினால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்
இவ்வாறு  அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்