Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரியலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 50 பவுன் தங்க நகை கொள்ளையால் பரபரப்பு

செப்டம்பர் 25, 2020 12:01

அரியலூர்: அரியலூரில் நள்ளிரவில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 50 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவர் அரியலூர் சின்னக்கடை வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இதனால் அரியலூரில் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம்  வியாபாரம் முடிந்ததும் சவுந்தர்ராஜன் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை கடைக்கு சென்று பார்த்த போது உள்ளே பல்வேறு பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் ஷோகேஸ்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் சவுந்தர்ராஜன் மற்றும் கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் கடையின் பின்புறம் சென்று பார்த்த போது கிரில்கேட் உடைக்கப்பட்டு இருந்ததுடன், நகை கடைக்கும் அருகில் உள்ள தேங்காய் கடைக்கும் பொதுவான சுவரில் ஒரு ஆள் செல்லும் அளவிற்கு துளையிடப்பட்டு இருந்தது. இதனால் நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்றதும் மர்மநபர்கள் கடையின் சுவரில் துளையிட்டு கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். எவ்வளவு நகைகள் கொள்ளை போனது? என்பது தெரியவில்லை. சுமார் 50 பவுன் நகைகள் வரை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. கொள்ளை போன நகைகளை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே இந்த கொள்ளை சம்பவம் குறித்து அரியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நகைக்கடைக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
கைரேகை நிபுணர்கள் கடையின் பல்வேறு இடங்களில் பதிந்திருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் கடையில் இருந்து மோப்ப பிடித்தப்படி சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொள்ளை போன நகைக் கடையில் ஒரு லாக்கரில் ரூ.1.50 லட்சம் பணமும், மற்றொரு லாக்கரில் தங்கம், வெள்ளி நகைகளும் இருந்துள்ளது. அதனை மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் அதில் இருந்த நகை, பணம் தப்பியது. அரியலூர் சின்னக்கடை வீதியானது கடைகள், தனியார் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். எப்போதும் பரபரப்பாக இயங்கும் பகுதியாகும். இந்த நிலையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் உள்ள நகைக்கடையில் மர்ம நபர்கள் சுவரில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு எஸ்.பி. சீனிவாசன், டி.எஸ்.பி. மதன், இன்ஸ்பெக்டர் செந்தில் நாதன், சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். இதேபோல், அரியலூர் மாவட்டம் செந்துறை மெயின் ரோட்டில் ரவிக்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் அங்குள்ள ஓடை வழியாக கடையின் பின்புறம் சென்று சுவரில் துளையிட்டு கடைக்குள் புகுந்து கொள்ளையடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கடையின் அருகே மருந்துகடை நடத்தி வருபவர் இரவு நேரங்களில் கடையின் மேல் உள்ள அறையில் தங்குவது உண்டு.

நள்ளிரவில் மர்மநபர்கள் கடையின் சுவரில் துளையிடும்போது சத்தம் கேட்கவே, அந்த மருந்து கடை உரிமையாளர் எழுந்து ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சுவரில் துளையிடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் சத்தம் போடவே, மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி சென்றனர்.

ரவிக்குமார் கடையில் மொத்தம் 100 பவுன் நகைகள் வரை விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் சுவரில் துளையிட்டு கடைக்குள் சென்றிருந்தால் அந்த நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றிருப்பார்கள். மருந்து கடை உரிமையாளர் பார்த்து சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் தப்பி சென்றதுடன், கடையில் இருந்த 100 பவுன் நகைகள் தப்பியது. இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே செந்துறை சோமங்களம் திருமண மண்டபம் அருகில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். அரசு பள்ளி ஆசிரியரான இவர் மட்டும் வீட்டில் இருந்தார். அவரது மனைவி வெளியூர் சென்று விட்டார். இந்தநிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். எவ்வளவு நகைகள் கொள்ளை போனது? என்பது தெரியவில்லை. ரவிக்குமார் நகைக்கடையில் கொள்ளை அடிக்க முயன்ற மர்மநபர்களே இந்த வீட்டிலும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 நகைக்கடைகள் மற்றும் ஆசிரியர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்