Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை ராஜவாய்க்காலில் அடைப்பு: 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

செப்டம்பர் 25, 2020 12:02

கோவை: கோவை மாவட்டத்தில் ராஜவாய்க்கால் பாலத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நள்ளிரவில் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் கோவையில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குளங்கள் நிறைந்து காணப்படுகிறது.

கிருஷ்ணாம்பதி குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேறி செம்மனாம்பதி குளம் வழியாக பொன்னையராஜபுரம் அருகே உள்ள முத்தண்ணங்குளத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முத்தண்ணங்குளம் நிரம்பி வழிகிறது. இந்த குளத்தில் இருந்து உபரி நீர் ராஜவாய்க்கால் வழியாக வெளியேறி செல்வ சிந்தாமணி குளம் வழியாக உக்கடம் பெரிய குளத்துக்கு செல்கிறது.

பொன்னையராஜபுரம் ராஜவாய்க்காலை அருகே பழனிசாமி காலனி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்றுமுன்தினம் இரவு ராஜவாய்க்காலில் தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள பாலத்தில் குப்பைகள் மற்றும் ஆகாய தாமரை செடிகள் அடைத்தது. இந்த அடைப்பு காரணமாக தண்ணீர் பாலத்தை தாண்டி அருகே உள்ள 50 வீடுகளுக்குள் நள்ளிரவு 12 மணிக்கு புகுந்தது. வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த மக்கள் திடீரென வீடுகளுக்கு வெள்ளநீர் புகுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் உடனடியாக குழந்தைகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். பின்னர் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றினர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து ராஜவாய்க்கால் பாலத்தில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

திடீரென நள்ளிரவு வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்ததால் அந்த பகுதியை பெண்கள் குழந்தைகளுடன் இரவு முழுவதும் தூங்காமல் ரோட்டில் தவித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் இரவு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்