Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல்லையில் இரண்டு பெண்கள் வெட்டிக்காலை: மாவட்ட போலீஸ் எஸ்.பி. நேரடி விசாரணை

செப்டம்பர் 27, 2020 07:11

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே முன் விரோதத்தால் 2 பெண்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. மணிவண்ணன் நேரில் சென்று விசாரைண நடத்தினார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி சண்முகத்தாய் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சுப்பையாவின் மனைவி சாந்தி. இந்நிலையில் அருணாசலம்-சண்முகத்தாய் தம்பதியின் மகனான நம்பிராஜன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நம்பிராஜனை வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் நம்பிராஜன் கொலைக்கு பழிக்குப்பழியாக கடந்த மார்ச் மாதம் மறுகால்குறிச்சியை சேர்ந்த ஆறுமுகம், சுரேஷ் ஆகிய 2 பேர் நாங்குநேரி பஸ் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சண்முகத்தாய் மகன் மற்றும் சாந்தி ஆகியோரின் மகன்கள் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 

இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 பேர் கொண்ட கும்பல் மறுகால்குறிச்சிக்கு சென்று  சண்முகத்தாய் வீட்டில் வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் அலறியடித்துக்கொண்டு சண்முகத்தாய் ஓடி பக்கத்து வீட்டிற்குள் சென்று பதுங்கியுள்ளார். விடாமல் துரத்திச்சென்ற கும்பல் அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளது. 
பின்னர் பக்கத்து தெருவில் உள்ள சாந்தியின் வீட்டில் வெடிகுண்டுகளை வீசி அவரை சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர். இதனை தடுக்க வந்த சாந்தியின் மகள் செல்விக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

தகவலறிந்ததும் நெல்லை எஸ்.பி. மணிவண்ணன், நாங்குநேரி டி.எஸ்.பி. தெரசாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த செல்வியை நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்