Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்: மறியலால் போக்குவரத்து பாதிப்பு

செப்டம்பர் 27, 2020 12:04

மொஹாலி: விவசாய மசோதாவைக் கண்டித்தும், வாபஸ் பெற வலியுறுத்தியும் சண்டிகர்- அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் பெரிய அளவில் போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதனால் அந்த சாலை முற்றிலும் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது. 

போராட்டம் நடக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மேலும் மூன்று நாட்களுக்கு போராட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் செப்டம்பர் 29ம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதையொட்டி ஏற்கனவே அந்த மாநிலத்தில் இருந்து இயங்கும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. மேலும் ரயில்கள் ரத்து செய்யப்படுமா? என்பது விரைவில் தெரிய வரும்.

சண்டிகர் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையை மறைத்து பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஹன்தேஸ்ரா என்ற இடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு இருக்கும் பஸ் நிறுத்தங்கள் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். இக்கட்சியின் தலைவர் நரிந்தர் சிங் ஷெர்கில் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காசர் ஜூராளி சாலையை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யூத் பஞ்சாப் அமைப்பினர், பரம்ஜித் சிங் பைத்வான் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மொஹாலியில் இருக்கும் சிங் ஹஹீத் குருத்வாரா ஏர்போர்ட் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். 

மொஹாலி நகரில் அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் மட்டும் நேற்று திறந்து இருக்கும் மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று பல்வேறு விவசாய அமைப்புகள் அறிவித்து இருந்தன. இதன்படி பல்வேறு மண்டிகளை விவசாயிகள் மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வரும் செப்டம்பர் 29ம் தேதி வரை போராட்டம் நீடிக்கப்பட்டு இருப்பதால், பெண்கள் அமைப்பும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளது. இன்று 28ம் தேதி பகத் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த நாளில் போராட்டத்தில் இளைஞர் அமைப்பினர் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளனர். ''எங்களது விவசாயிகள் போராட்டத்தில் எந்த அரசியல் தலைவர்களையும் பேச அனுமதிக்க மாட்டோம். விவசாய மசோதா வாபஸ் பெறும் வரை எங்களது ஆர்ப்பாட்டம் தொடரும்'' என்று கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் அமைப்பின் பஞ்சாப் மாநில செயலாளர் சர்வன் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்